காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை இன்று காலை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்கள் மூவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியான நிலையில், அந்த தீவிரவாதிகள் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா என பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், அவர்கள் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்றும், அதில் ஒரு பயங்கரவாதி, பஹல்காம் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவன் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
3 தீவிரவாதிகளை சுட்டுககொன்ற பாதுகாப்புப் படையினர்
ஜம்மு ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இந்திய ராணுவத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களில் ட்ரோன்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது.
அப்போது, குறிப்பிட்ட பகுதியல் பயங்கரவாதிகள் இருந்தது உறுதி செய்யப்பட்டு, அந்த பகுதிக்கு இந்திய ராணுவத்தினர் விரைந்தனர். ராணுவத்தினரை கண்ட பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, இரு தரப்பிற்கும் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆபரேஷன் மகாதேவ் என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த என்கவுண்ட்டர் நடந்ததாக பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களா என விசாரணை
3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், உயிரிழந்த பயங்கரவாதிகள், கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களா என்பது குறித்து, இந்திய ராணுவத்தினர் விசாரணை நடத்தினர். அதில், அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
பஹல்காம் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சுலைமான் சாஹா சுட்டுக்கொலையா.?
இந்த நிலையில், தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாகிளில் ஒருவன், பஹல்காம் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சுலைமான் சாஹா என்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய அபுஹம்சா, யாசிர் ஆகிய 2 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹலகாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியை, ‘ஆபரேஷன் மகாதேவ்‘ என்ற பெயரில் ராணுவம் மேற்கொண்டிருந்தது.
தீவிரவாதிகள் சுடப்பட்டது எப்படி.?
இந்த நிலையில், ஸ்ரீநகரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டச்சிகாம் என்ற பகுதிக்கு தீவிரவாதிகள் சென்றிருக்கலாம் என உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலையடுத்து, ராணுவமும், காஷ்மீர் காவல்துறையும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, டச்சிகாம் அருகே லிட்வாஸ் என்ற இடத்தில், வெளிநாட்டு நபர்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைக்கவே, பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது, ஜபர்வான் மற்றும் மகாதேவ் முகடுகளுக்கு இடையே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து தான், சுலைமான் சாஹா, அபுஹம்சா, யாசிர் ஆகிய 3 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.