ரயில் நிலையங்களில் ரயிலில் ஏறும் போது சிலர் தடுக்கி விழுவது சமீபத்தில் அதிகமாக நடைபெற்று வருகிறது. அப்படி தடுக்கி விழும் நபர்களை அங்கு பணியில் உள்ள ரயில்வே காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி வருகின்றனர். அந்தவகையில் தற்போது வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
இது தொடர்பான வீடியோவை மும்பை ரயில்வே காவல்துறை ஆணையர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி மும்பையின் ஜோகேஸ்வரி ரயில் நிலையத்தில் கடந்த 16ஆம் தேதி இரவு மூன்று பெண்கள் ரயிலில் ஏற முயற்சித்துள்ளனர். அப்போது இரண்டு பேர் ஏறியவுடன் ரயில் புறப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் ரயிலில் ஏற முயற்சி செய்த ஒரு பெண் தடுமாறி கீழே விழுந்தார். மேலும் ரயில் செல்லும் வேகத்தில் அவர் இழுத்து செல்லப்பட்டார். அந்த சமயத்தில் அங்குப் பணியில் இருந்த அல்டாஃப் ஷேக் என்ற காவலர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.
அவரின் இந்தச் செயலை பாராட்டி மும்பை ரயில்வே காவல்துறை அவருக்கு பரிசளிக்க உள்ளது. இதை தெரிவிக்கும் விதத்தில் ஆணையர் தன்னுடைய ட்விட்டர் பதிவை செய்துள்ளார். அத்துடன் அதில் அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இந்த காவலரின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்