ஹிமாச்சல பிரதேசம் சிம்லாவில் கனமழையில் சிக்கி தவித்த 28 ட்ரெக்கிங் வீரர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

Continues below advertisement

Continues below advertisement

பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லி, உத்தரகண்ட், உத்திர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் – சிம்லா, ஹரித்வார் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலரும் இதில் சிக்கித் தவித்து வருகின்றனர். சட்லஜ், பீஸ், யமுனா உள்ளிட்ட நதிகளில் அபாயகரமான அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் கரையோர மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பெய்யும் கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சிம்லாவில் சிக்கித் தவித்த 28 ட்ரெக்கிங் வீரர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரின் கூட்டு மீட்பு பணிகள் மூலம் ஹிமாச்சல பிரதேசத்தின் காரா பகுதி கின்னவுரில் சிக்கித் தவித்த 28 ட்ரெக்கிங் வீரர்கள் மீட்கப்பட்டனர்.

மேலும் தொடர் மழை, அதிக வெள்ளம் காரணமாக மீட்பு குழுவினர் இரவு அருகில் இருந்த பள்ளியில் தங்கிவிட்டு, காலையில் மீண்டும் பயணத்தை மேற்கொண்டு 28 பேரையும் ஒருவர் பின் ஒருவரை வரச் சொல்லி கயிற்றின் உதவியுடன் மீட்டுள்ளனர்.

அதேபோல் கஃப்னு கிராமத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 11 பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் இந்திய திபெத் எல்லையோர காவல் படையினர் இணைந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பலரும் தங்களது வீடுகளை இழந்து வாடுகின்றனர். உண்ண உணவும் இருக்க இடமும் இல்லாமல் திக்குமுக்காடியுள்ளனர். இதுவரை இது போன்ற மோசமான மழை பார்த்ததில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அந்தந்த மாநில அரசுகள் விரைவாக செயல்பட்டு வருகின்றனர்.