2017ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2021ம் ஆண்டு நவம்பர் வரை கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மருத்துவமனைக்கு வரும் அடையாளம் தெரியாத சடலங்கள் பற்றி, அதே மாநிலத்தைச் சேர்ந்த ராஜூ வலக்காலா என்பவர் ஆர்.டி.ஐ. சட்டத்தின் மூலம் தகவல் கேட்டார். அவரது கேள்விக்கு, ஆர்.டி.ஐ. சட்டத்தின் மூலம் கிடைத்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான எர்ணாகுளத்தில் உள்ள எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 267 அடையாளம் தெரியாத சடலங்கள் கிடைத்துள்ளது. இந்த சடலங்கள் பற்றியும், அவர்களது விவரங்கள் பற்றியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும், இந்த சடலங்கள் மூலம் எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்துள்ளது.




இந்த அடையாளம் தெரியாத சடலங்கள் விற்கப்பட்டது மூலமாக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 62 லட்சத்து 40 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது. அடையாளம் தெரியாத சடலங்களை மருத்துவ கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக, அரசு மருத்துவமனை நிர்வாகம் விற்பனை செய்துள்ளது. இந்த சடலங்கள் யாவும் 154 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும், 2 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் மாணவர்களின் கல்விக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது.


கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் எம்பாமிங் செய்யப்பட்ட அடையாளம் தெரியாத சடலம் தலா ரூபாய் 40 ஆயிரத்திற்கு விற்கப்பட்டுள்ளது. எம்பாமிங் செய்யப்படாத அடையாளம் தெரியாத சடலம் ரூபாய் 20 ஆயிரத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ஒரு சடலத்தின் எலும்புக்கூடு ரூபாய் 10 ஆயிரத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இந்த ஆர்.டி.ஐ. தகவல் மூலம் கொச்சியில் மர்மமான மரணங்கள் அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 2011 முதல் 2017ம் ஆண்டுகளில் மட்டும் அடையாளம் தெரியாத சடலங்கள் விற்பனை மூலம் ரூபாய் 1.49 கோடி வருவாய் எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.




சடலங்கள் விற்பனை மூலம் கிடைத்த வருவாயை கொண்டு மருத்துவமனையின் பிணவறை மற்றும் மருத்துவமனையிலே இயங்கி வரும் தடயவியல் துறை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் இந்த அடையாளம் தெரியாத சடலங்களில் பெரும்பாலானவை வயதானவர்களின் சடலங்கள் ஆகும். அவர்கள் பெரும்பாலும் சாலைகளிலும், நீர்நிலைகளிலும் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு சடலங்களாக கொண்டு வரப்பட்டவர்கள்.


அவர்களது கை ரேகைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மூலம் அவர்களது சடலங்களை, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனாலும், அவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்காத சூழலில் அவர்களது சடலங்கள் இதுபோன்று மருத்துவ கல்லூரிகளுக்கு விற்கப்படுகிறது. 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண