15 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த தினத்தை எந்தவொரு இந்தியனாலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. ஆம், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தொடர்  தாக்குதலில், 18 பாதுகாப்புப் படையினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


இந்தியா சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இந்த கொடூர தாக்குதல் மறக்க முடியாத, மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.



  • தாக்குதல்கள் தெற்கு மும்பையில் எட்டு இடங்களில் நடந்தது: சத்ரபதி சிவாஜி முனையம் ,தி ஓபராய் டிரைடன்ட் ஓட்டல் , தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர், லியோபோல்ட் கஃபே, காமா மருத்துவமனை (பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை), நரிமன் ஹவுஸ் யூத சமூக கூடம் ,மெட்ரோ சினிமா, டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டிடத்தின் பின்னாலுள்ள வழிபாதை மற்றும் சேவியர் புனித கல்லூரி. மும்பை துறைமுகம பகுதி மஜகாணிலும் வில்லே பார்லேயில் ஒரு டாக்ஸியிலும் குண்டு வெடிப்புகள் நடந்தது.


பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு வந்த பயங்கரவாதிகள்:


பாகிஸ்தான் கராச்சியில் இருந்து 10 பயங்கரவாதிகள் படகின் மூலம் மும்பைக்கு புறப்பட்டனர். கடல் வழியாகத்தான் மும்பைக்குள் நுழைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியக் கடற்படை வீரர்கள் அவர்களை தடுக்க முயன்றபோது இந்தியப் படகைக் கடத்தி, அதில் இருந்த அனைவரையும் கொன்றனர். இந்தப் படகைப் பயன்படுத்தி கொலாபா அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் இரவு 8 மணியளவில் அவர்கள் இறங்கினர். அப்பகுதி மீனவர்களுக்கும் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தாலும், போலீசார் அதை லேசாக எடுத்துக்கொண்டனர். 


தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதிகள்:


கொலாபாவில் இருந்து, தலா 4 பேர் கொண்ட பயங்கரவாதிகள் டாக்சிகளை எடுத்துக்கொண்டு அந்தந்த இடங்களை நோக்கிச் சென்றனர். சத்ரபதி சிவாஜி டெர்மினல் ரயில் நிலையத்தை இரவு 9.30 மணியளவில் பயங்கரவாதிகளின் ஒரு குழு அடைந்து, தங்கள் கைகளில் இருந்த ஏகே 47 துப்பாக்கிகள் கொண்டு சரமாரியாக சுடத் தொடங்கினர். இந்த தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான அஜ்மல் கசாப், அதன்பிறகு பாதுகாப்புப் படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டார். உயிருடன் பிடிக்கப்பட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப்,  கடந்த 2012 ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.


தாஜ் ஹோட்டல் தாக்குதல்:


அன்றிரவு மும்பையின் பல பிரபலமான இடங்களை பயங்கரவாதிகள் குறிவைத்தனர். தொடர்ந்து, மும்பையில் அமைந்துள்ள உலகத்தரம் வாய்ந்த ஹோட்டல்களில் ஒன்றான தாஜ் ஹோட்டல், ஓபராய் ட்ரைடென்ட் ஹோட்டல் மற்றும் நாரிமன் ஹவுஸ் ஆகியவைகளில் தாக்குதல் நடத்தப்பட இருந்தது. மும்பையின் ஷா என்று அழைக்கப்படும் தாஜ் ஹோட்டலை பயங்கரவாதிகள் முற்றிலுமாக கைப்பற்றினர், அங்கிருந்து மக்கள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே 3 நாட்களாக சண்டை நீடித்தது. காவல்துறையினர் மற்றும் இராணுவ நடவடிக்கைகளும் தோல்வியடைய தொடங்கிய நிலையில், என்எஸ்ஜி கமாண்டோக்கள் வரவழைக்கப்பட்டனர். அதன்பிறகு களமிறங்கிய என்எஸ்ஜி கமாண்டோக்கள் தங்கள் உடலை வீர மரணம் அடைய செய்து, அனைத்து பயங்கரவாதிகளையும் கொன்றனர். 


மேலும் சில முக்கிய தகவல்கள்...



  • இந்த தாக்குதல்கள் 2008ம் ஆண்டு புதன் கிழமையான, 26 நவம்பர் அன்று தொடங்கி நவம்பர் சனிக்கிழமை 29 வரை நீடித்தது. அதாவது 60 மணிவரை இந்த தாக்குதல் நடைபெற்றது.

  • தாஜ் ஹோட்டல் தவிர அனைத்து தளங்களையும் மும்பை போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தங்களது பாதுகாப்புக்குள் கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 60 மணி நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலை இந்திய ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்ததால் ஊடக நெறிமுறைகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.