கடலில் ஹெலிகாப்டர்.. கப்பலில் நுழைந்த அதிகாரிகள்.. 2500 கிலோ போதைப்பொருள் சிக்கியது எப்படி?
இந்தியக் கடற்படையின் முன்னணி போர்க்கப்பலான ஐஎன்எஸ் தர்காஷ், மேற்கு இந்தியப் பெருங்கடலில் 2500 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளை வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளது.

மேற்குக் கடற்படை தளத்தின் கீழ் செயல்படும் இந்தியக் கடற்படையின் முன்னணி போர்க்கப்பலான ஐஎன்எஸ் தர்காஷ், மேற்கு இந்தியப் பெருங்கடலில் 2500 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளை வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளது.
எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.
Just In




களத்தில் இறங்கிய போர்க்கப்பல்:
கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஜனவரி மாதம் முதல் மேற்கு இந்தியப் பெருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ் தர்காஷ், ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் கூட்டு நடவடிக்கையான அன்சாக் டைகரில் பங்கேற்றுள்ளது.
கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஐ.என்.எஸ் தர்காஷுக்கு இந்தியக் கடற்படையிடமிருந்து முக்கிய தகவல் கிடைத்தது. சில கப்பல்கள் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்திய கடற்படைக்கு கிடைத்த முக்கிய தகவல்:
இதையடுத்து, சந்தேகத்திற்கிடமான கப்பல்களை இடைமறிக்க ஐஎன்எஸ் தர்காஷ் முற்பட்டது. பி8ஐ மற்றும் மும்பையில் உள்ள கடல்சார் செயல்பாட்டு மையத்துடன் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக சந்தேகத்திற்கிடமான கப்பலின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், அப்பகுதியில் செயல்படக்கூடிய பிற கப்பல்களை அடையாளம் காணவும் ஐ.என்.எஸ் தர்காஷ் தனது ஒருங்கிணைந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தியது.
மரைன் கமாண்டோக்களுடன் இணைந்து சிறப்பு போர்டிங் குழு அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான கப்பலில் ஏறி சோதனையை நடத்தினர். இதில் பல்வேறு சீல் செய்யப்பட்ட பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. சோதனையிலும், விசாரணையிலும் கப்பலில் பல்வேறு சரக்கு பெட்டிகளில் 2,500 கிலோ போதைப் பொருட்கள் (2386 கிலோ ஹஷிஷ் மற்றும் 121 கிலோ ஹெராயின் உட்பட) பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தக் கப்பல் ஐ.என்.எஸ் தர்காஷின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.