மும்பை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு  கலினா பகுதியில்ஏர் இந்தியா நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்விற்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலைக்காக ஏராளமானோரின் வருகையால் அதிகாரிகள் சூழலை சமாளிக்க முடியாமல் திணறினர். 


மும்பை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள 2 ஆயிரத்து 216 பணியிடங்களுக்கு ஏர் இந்தியா   (Air India Airport Services Limited) நிறுவனம் நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்காக அலுவலகத்தில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க குவிந்ததால் அங்கு கூட்டம் கூடியது. நேர்காணல் செய்ய காத்திருந்த அதிகாரிகள் சூழலை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து சமூக வளைதளத்தில் வெளியான வீடியோ வைரலாகியது. அந்த வீடியோவில்  இடைவெளியே இல்லாமல் ஒருவரை ஒருவர் தள்ளியப்படி இருந்தனர். வேலைக்கு விண்ணப்பங்களை வழங்க முந்திகொண்டு சென்றது தெரிந்தது. கூட்ட நெரிசலில் ஏராளமானோர் சிக்கி கொண்டதும் வீடியில் இருந்தது. கூட்ட நெரிசல் இருந்ததால், விண்ணப்பதாரர்கள் பல மணி நேரம் தண்ணீர், உணவு எதுவும் இல்லாமல் காத்திருந்ததாக கூறப்படுகிறது. நெரிசல் அதிகமாக இருந்ததால் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






மேலாளர் உள்ளிட்ட வேலைவாய்ப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நேர்காணல் நடைபெற்றது. நேற்று (16.07.2024) Handman, Utility Agents ஆகிய இரண்டு பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது.  இவர்களது பணி விமானத்தில் பயணிகளின் பேக்குகளை எற்றி இறக்குவது, விமானத்தில் உணவுப் பொருட்களை லோட் செய்வது, கார்கோ பிரிவில் வேலை ஆகியவற்றிற்காக இந்த வேலைவாய்ப்பு நேர்காணல் அறிவிக்கப்பட்டது. இதற்கு மாத ஊதியமாக 20 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். கூடுதல் நேரம் வேலை செய்தால் ரூ.30,000 வழங்கப்படும். 8-வது தேர்ச்சி இதற்கு குறைந்தபட்ச தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேலைக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். இடைவெளியே இல்லாமல் கூட்ட நெரிசலுடன் வேலைக்கு விண்ணபிக்க வந்திருந்தவர்களின் வீடியோவை பார்த்து சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்தனர். 


விமான நிலையத்தில் உள்ள அடிப்படையான வேலைக்கு இவ்வளவு பேர் நேர்காணலுக்கு வந்திருக்கிறார்கள் என்றால், வேலைவாய்ப்பு எவ்வளவு மக்கள் காத்திருக்கின்றனர் என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். 




இந்த வேலைக்கான நேர்முகத் தேர்வில் பங்கெற்க 400 கிலோ மீட்டர் பயணித்து வந்த ப்ரதாமேஸ்வர் என்பவர் தெரிவிக்கையில்,” நான் Handuman பணிக்கு விண்ணப்பிக்க பல்தானா மாவட்டத்தில் இருந்து வந்திருக்கிறேன். இந்த வேலை எனக்கு கிடைத்தால் ரூ.22,500 மாத ஊதியமாக கிடைக்கும். நான் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.” என்று தெரிவித்தார். 


இந்த வேலைக்காக டிகிரி படிப்பை விட்டுவிடுவீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு,” வேறு வழியில்லை, வேலைவாய்ப்பு குறைவாக இருக்கிறது. இந்த வேலை கிடைத்தால் படிப்பை கைவிடுவதுதான் என் முடிவு.” என்று குறிப்பிட்டு அரசு வேலைவாய்புகளை அதிகரிகக் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 


ராஜஸ்தானின் அல்வர் பகுதியில் இருந்து மும்பைக்கு நேர்முகத் தேர்வில் பங்கேற வந்த ஒருவர் இளங்கலை பட்டம் முடித்தவர். இன்னொருவர் முதுகலை பட்டம் முடித்தவர். இருவருமே போட்டித் தேர்வுகளுக்காக படித்து வருகிறார்கள். குறைந்தப்பட்ச கல்வித் தகுதியுடைய இந்தப் பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வந்திருப்பது வேலைவாய்ப்பின்மையின் தீவிர நிலையைக் காட்டுவதாக சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். 


”8-ம் வகுப்பு தேர்ச்சி, உள்ளூர் மொழியில் பேச தெரிந்திருக்க வேண்டும் என்ற தகுதிகள் உடைய வேலைக்கு டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பித்திருப்பது பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுவதாக இருக்கிறது. படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் ஏராளமானோர் இருக்கின்றனர். அரசு இதை கவனத்தில் கொண்டு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.” என்று இந்த வீடியோவைப் பார்த்த ஒருவர் சமூக வலைதளபதிவில் கமெண்ட் செய்திருக்கிறார். 


இதே போல, சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலத்திலுள்ள  Bharuch மாவட்டத்தில் 10 ஓட்டுநர் பணியிடங்களுக்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வுக்கு 1,800 விண்ணப்பதாரர்கள் வந்திருந்ததும் பேசுபொருளாகியது. இந்த விவகாரத்திற்கு பதிலளித்த குஜராத் எம்.பி. மன்சுக் வசாவா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்ட தனியார் நிறுவனத்தை சாடியுள்ளார். 10 பணியிடத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட விவரங்களை நிறுவனம் தெளிவாக வெளியிட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதோடு, இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுகக் வேண்டும் என்று அந்நிறுவனத்தையும் எம்.பி. அறிவுறுத்தியுள்ளார். 


மும்பையில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேலைவாய்ப்பின்மை குறித்து விவாதித்து வருகின்றனர். மும்பை நேர்முகத் தேர்வு கூட்ட நெரிசல் வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் இது தொடர்பான எந்த விளக்கமும் அளிக்கவில்லை.