Goa Cylinder Blast: கோவாவில் சிலிண்டர் வெடித்த விபத்தில், உயிரிழந்தவர்களில் 3 பேர் பெண்கள் மற்றும் 3 முதல் 4 பேர் சுற்றுலா பயணிகள் என முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
கோவா - சிலிண்டர் வெடித்து கோர விபத்து
வடக்கு கோவாவில் உள்ள அர்போரா கிராமத்தில் அமைந்துள்ள பிரபலமான பார்ட்டி இடமான பிர்ச் பை ரோமியோ லேனில் இந்த மோசமான விபத்து அரங்கேறியுள்ளது. இதில் பலியானவர்களில் பெரும்பாலானோர், சமையலறை பணியாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், உயிரிழந்தவர்களில் 3 பேர் பெண்கள் மற்றும் 3 முதல் 4 பேர் சுற்றுலா பயணிகள் என தெரிவித்துள்ளார். . பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்தது என்ன?
அதிகாலை 1:00 மணியளவில் சமையலறை பகுதிக்கு அருகில் பலத்த சத்தத்துடன் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்பட்ட தீயானது மளமளவென பரவி சில நொடிகளில் முழு கட்டிடத்தையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்துள்ளனர். அந்த நேரத்தில் கிளப்பிற்குள் வழக்கமான தயாரிப்பு மற்றும் மூடும் பணிகள் நடந்து கொண்டிருந்ததாகவும், இதனால் பொதுமக்கள் அதிகம் இல்லை என்றும் கூறப்படுகிறது. எரிவாயு கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
23 பேர் பலியான சோகம்:
இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், அதற்குள் உயிரிழப்பு ஏற்பட தொடங்கிவிட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று முதல் நான்கு சுற்றுலாப் பயணிகளும், க்ளப்பின் ஊழியர்கள் 19 பேரும் அடங்குவர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 50 பேர் காயமடைந்து தற்போது கோவா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன, அதே நேரத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் நிலை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவு:
இரவு விடுதிக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது, மேலும் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது க்ளப்பின் பாதுகாப்பு நடவடிக்கைகள், எரிவாயு இணைப்பு அமைப்புகள் மற்றும் அதன் அவசரகால வெளியேறும் திட்டம் ஆகியவை ஏதேனும் மீறல்கள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க விசாரணையில் ஆராயப்படும் என்று காவல்துறை இயக்குநர் ஜெனரல் கூறியுள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, தீ பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கட்டிட விதிகள் பின்பற்றப்பட்டதா என்பதை உன்னிப்பாக ஆய்வு செய்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்