அருணாச்சலப் பிரதேசத்தில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி ஆபத்தான மலைப் பாதையில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் தான் இந்த பயங்கரமான விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஹேலாங் - சாக்லகாம் சாலை அருகே மெட்டெங்லியாங் பகுதியில் தான் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஆபத்தான மலைப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது ஆயிரக்கணக்கான அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் அதில் பயணித்த சுமார் 22 தொழிலாளர்கள் இறந்தனர், இதுவரை ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்குள்ளான லாரியில் பயணித்த அனைத்து தொழிலாளர்களும் அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கெலாபுகுரி தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது காவல்துறையினர் நடத்திய விசார்ணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு இடத்திற்கு ஒப்பந்த வேலைக்காகச் சென்று கொண்டிருந்தனர். அந்த பாதை மிகவும் கூர்மையான திருப்பங்கள், செங்குத்தான சரிவுகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் கொண்ட சாலையாக இருந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 17 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. 3 பேர் அடையாளம் காண முடியாத அளவுக்கு அவர்கள் முகம் சிதைந்து போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இறந்தவர்களின் குடும்பத்தினௌர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றது.
மீதமுள்ள உடல்களை தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விபத்து நடந்த இடம் மிக கடினமான நிலப்பரப்பு கொண்டதாகும். அங்கு மோசமான சாலைகள், செங்குத்தான சரிவுகள் இருப்பதால் மீட்பு படை வீரர்கள் சிரமம் அடைந்துள்ளனர். மாவட்ட காவல்துறை, மாவட்ட நிர்வாகம், துணைப் பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவம் ஆகிய குழுக்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய சீன எல்லையில் உள்ள இந்த பகுதியில் பயணிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மோசமான வானிலை, நிலச்சரவு, குறுகிய சாலை உள்ளிட்ட விஷயங்கள் பெரும்பாலும் விபத்து ஏற்பட காரணமாக அமைகிறது. எனினும், இப்போது நடந்துள்ள லாரி விபத்துக்காக காரணம் தெரியவில்லை. அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அஞ்சோவ் காவல் துணை ஆணையர் மிலோ கோஜின் கூறியுள்ளார்.