இந்தியா – அமெரிக்க ராணுவ ஒத்துழைப்புக் குழுவின் (MCG) 21-வது கூட்டம் 2024 நவம்பர் 05 முதல் 06  வரை புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திறன் வளர்ப்பு, பயிற்சி, பரிமாற்றங்கள், பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு, வழக்கமான கூட்டு பயிற்சிகள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


இந்தியா சார்பில் ராணுவ உயரதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ, அமெரிக்கா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஜோசுவா எம் ரூட் ஆகியோர் இந்த கூட்டத்திற்கு கூட்டாகத் தலைமை வகித்தனர். இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்று இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.


இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தியதுடன், மேம்பட்ட உத்திசார் செயல் திட்டங்களை வலுப்படுத்த உறுதிபூண்டனர். இந்திய-பசிபிக் பிராந்தியம் எதிர்கொள்ளும் சவால்களை இணைந்து எதிர்கொள்வதுடன், இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பின் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான தங்களது நிலையை  மீண்டும் உறுதிப்படுத்தினர்.


போர்க்கப்பலை பார்வையிடும் குடியரசுத் தலைவர்:



இந்நிலையில் விமானந்தாங்கி கப்பலான  ஐஎன்எஸ் விக்ராந்த் போர்கப்பலில் இந்திய கடற்படையின் நடவடிக்கைகளை குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு 2024 நவம்பர் 7 அன்று பார்வையிட உள்ளார்.


கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, ஐஎன்எஸ் ஹன்சாவில் (கோவாவில் உள்ள கடற்படை விமான தளம்) குடியரசுத்தலைவரை வரவேற்று, 150 பேர் பங்கேற்கும் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை வழங்குவார். அதன்பிறகு, குடியரசுத்தலைவர் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் பயணம் செய்ய உள்ளார்.


ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானந்தாங்கி கப்பலில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, கடற்படை நடவடிக்கைகளின் முழு செயல்பாடுகளையும் காணவிருப்பது இதுவே முதல் முறையாகும் எனவும் கூறப்படுகிறது.