சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இறுதியாக, விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


அச்சுறுத்தும் ஜேஎன் 1 கொரோனா:


இச்சூழலில், கடந்த சில வாரங்களாகவே கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால், அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது, கேரளாவில் JN.1 புதிய வகை கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.


அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில், இந்த வகை கொரோனா பரவிய நிலையில், தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு மேற்கொண்ட கண்காணிப்பு பணிகளின்போது புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது.


இந்த நிலையில், JN.1 புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே. பால் கூறுகையில், "நாடு முழுவதும் JN.1 வகை கொரோனாவால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.


21 பேருக்கு பாதிப்பு:


JN.1 வகை கொரோனாவால் கோவாவில் மட்டும் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் ஒருவரும் கேரளாவில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார்.


இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், "விழிப்புடன் இருப்பது முக்கியம். உருமாறும் புதிய வகை கொரோனா வைரஸ்-க்கு எதிராக தயாராக இருப்பது அவசியம். கொரோனாவை திறம்பட நிர்வகிப்பதை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே சுமூகமான ஒருங்கிணைப்பு வேண்டும்.


மாஸ்க் அவசியம்:


மத்திய மற்றும் மாநில அளவில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒத்திகை பயிற்சிகளை மேற்கொள்வோம். சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வோம். கொரோனா காலம் இன்னும் முடிவடையவில்லை. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது அறிகுறிகளையும் மாநிலங்கள் கண்காணிப்பது, அதற்கு ஏற்ற வகையில் பொது சுகாதாரத்தை திட்டமிடுவது அவசியம்" என்றார்.


கேரளாவில் கொரேனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, கர்நாடகாவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இருமல், சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில், BA.2.86 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கடந்த ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 14 லட்சம் பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2,300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கு முன்பான 28 நாள்களை ஒப்பிடுகையில், கொரோனா வைரஸ் பரவல் 63 சதவிகிதம் அதிகரித்தது. ஆனால், இறப்பு விகிதம் 56 சதவிகிதம் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.