அஸ்ஸாம் குவஹாத்தியில் தங்கியுள்ள மகாராஷ்டிர அதிருப்தி எம்எல்ஏக்கள் அணியில் மற்றொரு அமைச்சரான உதய் சமந்த் இன்று இணைந்தார். இதற்கிடையே, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுடன் 20 அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிரடியான அரசியல் நகர்வுகள் நிகழ்ந்து வருகிறது. அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேருக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவசேனா திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆதரவு தராவிட்டால் கட்சியில் இருந்து நீக்கம்.. மிரட்டியதா எடப்பாடி தரப்பு? : ஓபிஎஸ் ஆதரவாளர் பேச்சால் பரபரப்பு
ஏக்நாத் ஷிண்டே, குலாப்ராவ் பாட்டீல், தாதா பூசே ஆகியோரின் அமைச்சர் பதவி பறிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்துல் சாட்டர், ஷம்புராஜே தேசாய் ஆகிய இணையமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அஸ்ஸாம் குவஹாத்தியில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் அணியில் மற்றொரு அமைச்சரான உதய் சமந்த் இன்று இணைந்தார். ஷிண்டேவின் அணியில் இணையும் ஒன்பது அமைச்சர் இவர் ஆவார். தாக்கரே அணியினர் பெரும்பான்மையை இழந்திருக்கும் நிலையில், கட்சி சின்னம் தங்களுக்குதான் சொந்தம் என ஷிண்டே தெரிவித்திருந்தார். இதை மறுத்துள்ள தாக்கரே அணியினர், கட்சி மாறி தேர்தலை சந்திக்கும்படி அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சவால் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் ஆதித்யா தாக்கரே கூறுகையில், "உங்களுக்கு தைரியம் இருந்தால், சிவசேனாவை விட்டு வெளியேறி, கட்சி மாறி தேர்தலை சந்தியுங்கள். நாங்கள் செய்வது தவறு, உத்தவ் தாக்கரே தலைமை தவறு, நாங்கள் அனைவரும் செய்வது தவறு என்று நீங்கள் நினைத்தால், ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்கவும். நாங்கள் தயார்" என்றார்.
பாஜகவில் இணைவது தொடர்பாக அதிருப்தி அணியில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மகாராஷ்டிர அமைச்சராக உள்ள பச்சு காடுவின் பிரஹர் ஜனசக்தி கட்சியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றி உத்தவ் தாக்கரே ஆதரவாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், "குவஹாத்தியில் இன்னும் எத்தனை நாள்கள் மறைந்து இருப்பீர்கள்" என ட்வீட் செய்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்