பீகார் மாநிலத்தில் நேற்று இரவு கள்ளச்சாராயம் குடித்த 20 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர், ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு, பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தியதில் இருந்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.
பிகாரில் சோகம்:
பீகார் தலைநகர் பாட்னாவிலிருந்து வடமேற்கே 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மோதிஹாரியில் லக்ஷ்மிபூர், பஹர்பூர், ஹர்சித்தி ஆகிய பகுதிகளில்தான் தற்போது உயரிழப்பு பதிவாகியுள்ளது. கள்ளச்சாராயம் தொட்டியில்(டேங்கர்) நிரப்பப்பட்டு, மோதிஹாரிக்கு கொண்டு வரப்பட்டது. இதை அருந்திய உள்ளூர்வாசிகள், தற்போது மரணம் அடைந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடம் என அச்சம் கொள்ளப்படுகிறது. ஆனால், காவல்துறை தரப்பிலோ மாவட்ட நிர்வாகம் சார்பிலோ இதுகுறித்து இன்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை.
கள்ளச்சாராயம் விவகாரத்தில், மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் தொடர் மோதல் வெடித்து வருகிறது. பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் உயிரிழந்தது குறித்து தேசிய மாநில உரிமைகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதில், இறப்புக்கு மாநில நிர்வாகமே காரணம் என குற்றம்சாட்டியிருந்தது.
நிதிஷ் குமார் vs பாஜக:
இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து, முதலமைச்சர் நிதிஷ் குமாரை குறிவைத்து பாஜக விமர்சித்து வருகிறது. ஆனால், அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், "பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான மத்திய அரசால் மாநில அரசாங்கத்தை அவதூறு செய்யும் வகையில் மனித உரிமைகள் குழு அறிக்கை வெளியிட்டது" என்றார்.
கள்ளச்சாராய விவகாரம் குறித்து விளக்கம் அளித்த முதலமைச்சர் நிதிஷ் குமார், "யாராவது மது அருந்தினால், அவர்கள் இறக்கதான் செய்வார்கள். உதாரணம் நம் முன் உள்ளது. இதற்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும். அந்த இடங்களை பார்வையிட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
இங்கு மதுவிலக்கு இல்லாத காலத்திலும், பிற மாநிலங்களில் கூட, கள்ளச்சாராயத்தால் மக்கள் இறந்தனர். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இங்கு மதுவிலக்கு அமலில் உள்ளதால், போலியான பொருட்கள் விற்கப்பட்டு, மக்கள் உயிரிழக்கின்றனர். மதுபானம் மோசமானது அதை உட்கொள்ளக்கூடாது" என்றார்.
பீகார் அரசியல்:
பீகாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அக்கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியில் கடந்தாண்டு இணைந்தது.
இதையடுத்து, பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை இணைக்க நிதிஷ் குமார் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.