பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மகாராஷ்டிராவை சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த உரிமையாளரிடமிருந்து 415 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை இயக்குநரகம் இன்று பறிமுதல் செய்துள்ளது.
இந்திய வங்கியில் நடைபெற்ற மிக பெரிய மோசடி வழக்கில் இந்த கட்டுமான தொழில் நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரேடியஸ் டெவலப்பர்ஸின் சஞ்சய் சாப்ரியா மற்றும் ஏபிஐஎல் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் அவினாஷ் போசலே ஆகியோர் யெஸ் பேங்க்-டிஎச்எஃப்எல் (திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்) வழக்கில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான 17 வங்கிகளின் கூட்டமைப்பிற்கு 34,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர்.
கடந்த வாரம், புனேவில் உள்ள அவினாஷ் போசலேவுக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டரை மத்திய புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.
இன்று, மும்பையின் சான்டாக்ரூஸில் உள்ள 116.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், பெங்களூரில் உள்ள 115 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், சாப்ரியாவின் நிறுவனத்தின் 25% பங்குகள், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சான்டாக்ரூஸில் உள்ள மற்றொரு பிளாட், 3.10 கோடி ரூபாய் மதிப்புள்ள சஞ்சய் சாப்ரியாவின் மூன்று உயர் ரக சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், அவினாஷ் போசலேவின் சொத்துகள் ரூ.102.8 கோடி மதிப்புள்ள மும்பையில் உள்ள டூப்ளக்ஸ் பிளாட், ரூ.14.65 கோடி மதிப்புள்ள புனேயில் ஒரு நிலம், ரூ.29.24 கோடி மதிப்புள்ள புனேயில் மற்றொரு நிலம், நாக்பூரில் 1.45 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இருவருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ் அமலாக்கத்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 1,827 கோடி ரூபாய் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர், டிஎச்எஃஎல் ப்ரோமட்டர்கள் கபில் வாத்வான் மற்றும் தீரஜ் வாத்வானை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்