உத்தரப் பிரதேசத்தில் சனிக்கிழமையன்று புதிதாக திறக்கப்பட்டுள்ள லுலு மாலுக்குள் நுழைந்த இருவர், ஹனுமான் மந்திரத்தை பாடியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மந்திரத்தை ஓதத் தொடங்கிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஷாப்பிங் மாலுக்குள் நுழைய முயன்ற போது சலசலப்பை ஏற்படுத்தியதற்காக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.


இதுகுறித்து துணை காவல் ஆணையர் (தெற்கு) கோபால கிருஷ்ண சவுத்ரி கூறுகையில், "இரண்டு பேர் வணிக வளாகத்திற்குள் நுழைந்து, தரையில் அமர்ந்து மந்திரங்களை ஓத தொடங்கினர். வர்த்தக நிலையத்தின் பாதுகாப்புப் பணியாளர்களால் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.


இருவரும் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில், வலதுசாரிக் குழுவைச் சேர்ந்தவர்கள் வணிக வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி, கலவரத்தை உருவாக்க வேண்டாம் என எச்சரித்து விடுவித்தனர்.


இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவுகள் 153A (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295A (மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட வேண்டுமென்றே செயல்) ஆகியவற்றின் கீழ், சமீபத்தில் மாலில் தொழுகை நடத்தியதாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததை அடுத்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.


மாலில் ஒரு குழுவினர் தொழுகை நடத்துவது போல வெளியான வீடியோ சமூக ஊடகங்களில் சர்ச்சை கிளப்பியது. வணிக வளாகத்திற்குள் மக்கள் நமாஸ் செய்வதற்கு வலதுசாரி அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இச்சூழலில், அங்கு ஹனுமான் மந்திரத்தை ஓதுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது.


வீடியோவில் காணப்பட்டவர்கள் தங்கள் ஊழியர்கள் இல்லை என்று கூறி, மாலின் பிரதிநிதிகள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, "மாலில் மத பிரார்த்தனைகளுக்கு அனுமதி இல்லை" என மால் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.


இந்த மால் ஜூலை 10 அன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் திறந்து வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரரான யூசுப் அலி எம் ஏ தலைமையிலான அபுதாபியை தளமாகக் கொண்ட லுலு குழுமத்தால் இது திறக்கப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண