ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் திரும்ப பெறப்பட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து காரணமாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது. 


"சட்டப்பிரிவு 370ஐ நீக்கி நடவடிக்கை எடுத்ததன் மூலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக்கில் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு அமைதி நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீர் கடந்த 30 ஆண்டுகளாக தீவிரவாதத்தின் தாக்கத்தை சந்தித்து வந்தது. பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பாக இயங்கி வருகின்றன. தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அச்சத்தில் வாழ்ந்த மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்" என உச்ச நீதிமன்றத்திலேயே மத்திய அரசு வாதிட்டது.


ஆனால், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் குறையவில்லை என்றும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்:


இந்த நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுண்டர் சம்பவத்தில் ராணுவ அதிகாரிகள் இருவரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தோஞ்சக், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹிமான்யுன் முஸாமில் பட் ஆகியோர் துப்பாக்கிச்சூட்டின்போது கொல்லப்பட்டனர்.


இதில், கர்னல் மன்பிரீத் சிங், 19 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு தளபதியாக பொறுப்பு வகித்து வந்தவர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் 19 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு தளபதி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அனந்த்நாக் கோகர்நாக் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் பயங்கரவாதிகள் நடத்திய கடும் துப்பாக்கிச் சூட்டுக்கு இடையே போலீஸ் அதிகாரியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.


மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்கள்:


லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், ராணுவத்தின் 15 கார்ப்ஸ் படைப்பிரிவு கமாண்டர், ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் என்கவுன்டர் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்கும் பணியை மேற்பார்வையிட்டு வருகின்றனர். என்கவுண்டர் நடந்த இடத்தில் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்பட்ட தகவலையடுத்து நேற்று இரவு ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து கூட்டு நடவடிக்கையில் இறங்கினர். படைப்பிரிவு தளபதி, ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான துருப்புக்கள் மீது கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.


கடந்த 24 மணி நேரத்தில் இது இரண்டாவது என்கவுண்டர் ஆகும். முன்னதாக, ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.