பாஜக ஆட்சி நடைபெற்று வரும் அசாம் மாநிலத்தில்,  திப்ருகர் என்ற பெயரில் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் பல மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அங்கு வணிகவியல் பிரிவில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஆனந்த் சர்மாவை  மூத்த மாணவர்கள் ரேகிங் செய்ததாகக் கூறப்படுகிறது.  நவம்பர் 26ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரையில் தொடர்ந்து ரேகிங் செய்யப்பட்டதால் மனமுடைந்த  ஆனந்த் சர்மா, விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். அப்போது படுகாயமடைந்த அவர் சக மாணவர்களால் அருகே இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆனந்த் சர்மாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






மாணவர்கள் மீது நடவடிக்கை:


இதனிடையே,  மாணவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பல்கலைக்கழகத்தின்  முன்னாள் மாணவர் ஒருவர் மற்றும்  தற்போது அங்கு பயின்று வரும்  மாணவர்கள் 4 பேர் என 5 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர். அதைதொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்ட நிலையில், ரேகிங்கில் ஈடுபட்டதாக 18 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கைதான மாணவர்கள் விசாரணை முடியும் வரை பல்கலைக்கழக வகுப்புகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


பல நாட்களாக தொடர்ந்த ரேகிங்:


சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் சர்மாவின் தாயார்,  கடந்த ஒரு மாதமாக எனது மகன் விடுதியில் ரேகிங்கால் பாதிக்கப்பட்டுள்ளான். தினமும் செல்போன் மூலம் எங்களை தொடர்பு கொண்டு  உடல் மற்றும் மனரீதியாக அனுபவித்த கொடுமைகளை கூறுவான். அதைதொடர்ந்து எங்களின் ஆலோசனையின்படி, கடந்த நவம்பர் 17ம் தேதி 10 மாணவர்களின் பெயரைக் குறிப்பிட்டு பல்கலைக்கழக  விடுதியின் வார்டனிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தான். ஆனால் அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது மகன் மாடியில் இருந்து குதித்த பிறகு, ஆனந்த் சர்மா குளியலறையில் விழுந்து காயம் அடைந்துவிட்டதாக தான் மாணவர் ஒருவர் எங்களுக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு பல்கலைக்கழக அதிகாரிகளே பொறுப்பு. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் கூறினார்.


உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை:


குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் தனது மகனை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்ததாகவும், கொலை செய்ய முயன்றதாகவும், பணத்தை கொள்ளையடித்து, மொபைலை பறித்துச் சென்றதாகவும் மாணவரின் தாய் தெரிவித்துள்ளார். தனது மகனின் கையில் மது மற்றும் போதைப்பொருகளையும் வைத்து ஆட்சேபனைக்குரிய புகைப்படங்களை எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.