ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக குஜராத் சட்டசபையில் அமலியில் ஈடுபட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த விவகாரம் தொடர்பாக கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது இல்லத்தில் மூத்த தலைவர்கள் மற்றும் எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை எதிர்த்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால், நேற்று இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு புதுவை சட்டப்பேரவை:
அதேபோல் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி பேரவையில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திமுக காங்கிரஸ் வெளிநடப்பு செய்தனர்.
குஜராத் சட்டப்பேரவை:
தற்போது குஜராத் சட்டசபையிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்து வந்தனர். காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் அமித் சாவ்தா, ராகுல் காந்தியின் தகுதிநீக்கம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் கேள்வி நேரத்தில் அதற்கு அனுமதியில்லை என சபாநாயகர் சங்கர் சவுத்திரி கூறினார். இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபை நடுவே ஒன்றாக கூடி மோடிக்கு எதிரான கோஷங்களை முழங்கி, பிரதமர் மோடியும் அதானியும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை ஏந்தினர். சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் அவர்கள் ஒருநாள் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள் என கூறி அவர்களை வெளியேற்ற பேரவை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆனால் அவர்கள் வெளியேற மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சிலரை குண்டுக்கட்டாக காவலர்கள் வெளியேற்றினர். இந்த அமலியின் காரணமாக இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இடை நீக்கம் செய்யப்பட வேண்டுமென குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அமலியில் ஈடுபட்ட 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீதமுள்ள கூட்டத்தொடரில் பங்குபெற முடியாத வகையில் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பீகார் சட்டசபை:
ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் எதிர்த்து பீகார் சட்டபேரவையில் கடும் அமலி நிலவியது. பீகாரில் ஆளும் கட்சி உட்பட கூட்டணி கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தினர். கருப்பு பட்டைகளை அணிந்து கையில் ராகுல் காந்தி புகைப்படத்தையும் கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால் அரசு அளித்த பங்களாவில் இருந்து வெளியேற ராகுல் காந்திக்கு மக்களவை வீட்டு வசதிக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.