மத்திய பிரதேசத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் கார்கோன் பகுதியில் பேருந்து ஒன்று இந்தூரை நோக்கி பயணம் மேற்கொண்ட போது ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 25 பேர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் பேருந்தில் பயணித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கோன் பகுதியில் உள்ள பாலத்தின் மீது பேருந்து பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாக அருகில் இருக்கும் மக்கள் குறிப்பிட்டனர். பேருந்து விபத்துக்குள்ளானதும் அருகில் இருக்கும் மக்கள் உடனடியாக மீட்பு பணியை மேற்கொண்டர். மாவட்ட ஆட்சியர் சிவராஜ் சிங் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். இந்த விபத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்தியப் பிரதேச அரசு ரூ .4 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்தது. மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியாக 50,000 ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. ”கார்கோனில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது” என கார்கோன் பகுதி எஸ்.பி தரம் வீர் சிங் கூறியுள்ளார்.