Rajasthan Mine Accident: ராஜாஸ்தானில் சுரங்கம் ஒன்றில் இருந்த லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.


அறுந்து விழுந்த லிஃப்ட்:


ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கம் உள்ளது. அங்கு நேற்று இரவு லிப்ட் இடிந்து விழுந்ததில் மூத்த விஜிலென்ஸ் அதிகாரிகள் உட்பட 15 பேர் சிக்கினர்.  கொல்கத்தாவில் இருந்து வந்த விஜிலென்ஸ் குழுவை ஏற்றிச் சென்ற லிப்ட், சுரங்கத்திற்குள் கிட்டத்தட்ட 2,000 அடி ஆழத்தில் விபத்துக்குள்ளானது. அவர்களில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி உபேந்திர பாண்டே, கேத்ரி காப்பர் காம்ப்ளக்ஸ் பிரிவு தலைவர் ஜி.டி.குப்தா மற்றும் கோலிஹான் சுரங்கத்தின் துணை பொது மேலாளர் ஏ.கே.சர்மா ஆகியோர் அடங்குவர். விஜிலென்ஸ் குழுவுடன் சுரங்கத்திற்குள் புகைப்படக் கலைஞராக நுழைந்த பத்திரிகையாளரும் சிக்கி இருந்தார்.









2000 அடி ஆழத்தில் சிக்கிய 15 பேர்:


விஜிலென்ஸ் அதிகாரிகள் சுரங்கத்தின் அடிப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, மேற்பகுதிக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, லிஃப்டின் கம்பி அறுந்ததில் அடிப்பகுதிக்கு சென்று விழுந்துள்ளது. 






ஒருவர் பலி


இரவு 8 மணியளவில் விபத்து நடந்ததாக கூறப்பட்ட நிலையில் இருட்டில் மீட்பு பணிகளை மேற்கொள்வது சிரமமாக இருந்தது. இதையடுத்து அதிகாலை முதலே மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அதன் விளைவாக சுரங்கத்தில் சிக்கியவர்களில் 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.  ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிலருக்கு கால் மற்றும் முழங்கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.