பழங்களில் மாம்பழத்திற்கு என்று ஒரு தனிச்சிறப்பு எப்போதும் உண்டு. தமிழ்நாட்டின் முக்கனிகளில் முதல் கனியாக மாம்பழம் உள்ளது. மாம்பழத்தில் அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், சேலம் மாம்பழம், பெங்களூரா, பீதர் மாம்பழம், சேலம் குதாதாத் என பல வகை மாம்பழங்கள் உண்டு. இந்த மாம்பழங்களின் சுவைகளுக்கு என்று தனி ருசிப்பிரியர்களும் உண்டு. இவை அனைத்தும் தனித்தனியாக விளைவிக்கப்படுகிறது. இந்த ரக மாம்பழங்கள் அனைத்தும் ஒரே தோட்டத்தில் விளைவது என்பதே அபூர்வமானது. இந்த நிலையில், அத்தனை ரக மாம்பழங்களும் ஒரே மரத்தில் காய்த்துள்ளது என்றால் நம்ப முடியுமா?


உத்தரபிரதேசத்தில் அப்படி ஒரு அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது சஹரன்பூர். இந்த பகுதியிலும், இந்த பகுதியைச் சுற்றிலும் மாம்பழ சாகுபடி அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் மாம்பழ சாகுபடியை அதிகரிக்க தோட்டக்கலை வல்லுனர்கள் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.




அவர்கள் ஒரே மரத்தில் பல ரக மாங்காய்கள் காய்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். 15 வருடமாக வளர்ந்து வந்த ஒரு மாமரத்தில் அவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டனர். கடந்த 5 ஆண்டுகளாக தோட்டக்கலை வல்லுனர்கள் மேற்கொண்ட இந்த முயற்சி அவர்களுக்கு நல்ல பலனை அளித்துள்ளது. அவர்கள் மேற்கொண்ட முயற்சியால் அந்த ஒரே மாமரத்தில் 121 ரக மாங்காய்கள் காய்த்துள்ளது. இந்த மாமரத்தில் துசெரி, லங்ரா, சவுன்சா, ராம்கீலா, அம்ரபலி, சஹரன்பூர் அருண், சஹரன்பூர் வருண், சஹரன்பூர் சவ்ரப், சஹரன்பூர் கவுரவ், சஹரன்பூர் ராஜீவ், லக்னோ சபோடா, புசா சூர்யா, ரதவுல், கல்மி மால்டா, பாம்பே, ஸ்மித், மாங்கிபெரா ஜலோனியா, கோலா பூலாந்சர், லரங்கு, எல்.ஆர்.ஸ்பெஷல், ஆலம்பூர் பெனிஷா, அசோஜியா டியோபான்ட் உள்பட 121 ரக மாங்காய்கள் அந்த ஒரே மரத்தில் காய்த்துள்ளது.


மாம்பழ சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், அதன் சுவை எவ்வாறு உள்ளது என்று அறிவதற்காகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தோட்டக்கலை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சஹர்ன்பூர் பகுதி முழுவதும் ஒரே மரத்தில் 121 ரக மாங்காய்கள் காய்த்துள்ள தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் அந்த தோட்டத்திற்கு வந்து அந்த மாமரத்தையும், மாங்காய்களையும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். 


இந்த புதுமுயற்சி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சஹர்ன்பூர் தோட்டக்கலை மற்றும் பயிற்சி மையத்தின் கூடுதல் இயக்குனர் பானு பிரகாஷ்ராம் நாங்கள் புது ரகங்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம், அதன்மூலம் மாங்காய்கள் புது வகைளை உருவாக்க முடியும். மேலும், மக்களும் இந்த யுத்திகளை பயன்படுத்தி அதிக விளைச்சலை காண முடியும் என்றார்.


உலகத்திலே மாம்பழ உற்பத்தியில் இந்தியா மிகவும் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 1,500 ரக மாம்பழ வகைகள் உள்ளது. இவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாம்பழ ரகங்கள் வணிக பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.