சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கோண்டா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். பெஜ்ஜி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் என்கவுன்ட்டர் நடந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் சவான் உறுதி செய்தார்.
சுக்மா மாவட்டத்தின் பெஜ்ஜி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொராஜூகுடா, டான்டெஸ்புரம், நகரம் மற்றும் பந்தர்பதார் ஆகிய கிராமங்களின் வன மலைப்பகுதியில் DRG குழு மற்றும் நக்சலைட்டுகளுக்கு இடையே இந்த என்கவுன்டர் நடைபெற்றுள்ளது. நக்சலைட்டுகள் ஒடிசா வழியாக சத்தீஸ்கரில் நுழைவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்த என்கவுண்டர் ப்ளான் செய்யப்பட்டுள்ளது. பஸ்தார் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பி சுந்தர்ராஜ், என்கவுன்டர் நிகழ்வை உறுதி செய்துள்ளார்.
அதன்படி 10 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் INSAS துப்பாக்கி, AK-47, Self Loading Rifle மற்றும் பல துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கை குறித்து பேசிய சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணுதேவ் சாய், ”நக்சலிசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதான் எங்கள் கொள்கை. இந்த கொள்கையில்தான் எனது அரசு செயல்பட்டு வருகிறது” என்றார்.
மேலும், “பஸ்தரில் வளர்ச்சி, அமைதி மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எனது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை” என்றும் அவர் கூறினார்.
அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வழி பஸ்தருக்கு திரும்பியுள்ளது என்றும் முதல்வர் விஷ்ணுதேவ் கூறினார். சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இந்த என்கவுன்டர் அமைந்துள்ளது.
இதேபோல், கடந்த மாதம், சத்தீஸ்கரில் உள்ள நாராயண்பூர்-தந்தேவாடா எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏகே சீரிஸ் உள்ளிட்ட பல ஆயுதங்கள் அப்போது பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.