கேரளாவில் ராஜ நாகம் ஒன்று சுமார் 200 கி.மீட்டர் தூரம் வரை காரின் என்ஜினில் தங்கியபடி கார் உரிமையாளருடன் பயணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கேரள மாநிலம், மலப்புரம், ஆர்ப்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவரது காரில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்தப் பாம்பு ஏறியதாகக் கூறப்படுகிறது.


அங்குள்ள வழிக்கடவு சோதனைச் சாவடிக்கு அருகே இவரது கார் நிறுத்தப்பட்டிருந்தபோது பாம்பு ஏறியதைக் கண்டதாக உள்ளூர் மக்கள் சிலர் ஏற்கெனவே இவரிடம் எச்சரித்துள்ளனர்.


ஆனால் இவர் சல்லடை போட்டு காரில் தேடியும் பாம்பு எதுவும் அகப்படாததால், தன் வேலையை பார்த்தபடி  காரில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்துள்ளார்.


இந்நிலையில், முன்னதாக ஆக.28ஆம் தேதி இவர் தன் காரில் தொங்கிக் கொண்டிருந்த பாம்பின் தோலைக் கண்டு அச்சத்தில் உறைந்துள்ளார்.


தொடர்ந்து சுஜித்தின் குடும்பம் முழுவதும் பெரும் அச்சத்தில் உறைந்த நிலையில், காரில் மீண்டும் சல்லடை போட்டு தேடியுள்ளனர். ஆனால் அப்போதும் பாம்பு கிடைத்தபாடில்லை.


இந்நிலையில், இன்று (செப்.1) காலை சுஜித்தின் வீட்டிலிருந்து 500 மீட்டின் தொலைவில் உள்ள ஒரு வீட்டில்  தேங்காய் மட்டைகளின் இடையே ராஜ நாகத்தின் வால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 






இதனையடுத்து வனத்துறை அலுவலர்களுக்கு உடனடியாகக் தகவல் கொடுக்கப்பட்டு அங்கு விரைந்து வந்த அலுவலர்கள் பாம்பை மீட்டு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து ராஜ நாகத்தை பாதுகாப்பாய் மீண்டும் காட்டுக்குள் விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதேபோல் முன்னதாக வனத்துறை அதிகாரி ஒருவரின் ஷூவில் இருந்து சிறிய நல்ல பாம்பு ஒன்று மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒடிசா மாநில வனத்துறை அதிகாரியாகச் செயல்பட்டு வருபவர் சுசந்தா நந்தா. இவர் தனது ட்விட்டரில் தொடர்ச்சியாக வனத்துறை சார்ந்த பல வீடியோக்களை பகிர்ந்து வருபவர். அண்மையில் இவர் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலானது.


சுசந்தா பகிர்ந்த வீடியோவில் அதிகாரி ஒருவர் ஷூ ரேக்கில் இருக்கும் ஒரு ஸ்போர்ட்ஸ் ஷுவில் வளைந்த அலுமினியக் கம்பி ஒன்றை நுழைக்கிறார். நாம் என்னவாக இருக்கும் என யோசிக்கும் அடுத்த நொடியில் அதை அடுத்து ஷூவில் இருந்து திடீரென ஒரு நல்ல பாம்பு படம் எடுத்தபடியே சீறும் சத்தத்துடன் எட்டிப் பார்க்கிறது. பார்ப்பதற்கு 20 செமீ நீளம் என யூகிக்கும் அளவுக்கு இருக்கும் அந்த சிறிய பாம்பை அந்த அதிகாரி மிகவும் உஷாராக ஷூவில் இருந்து எடுக்கிறார். 


 










அதனை எடுத்தபடியே அவர் பார்ப்பவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். அதில்,’இதனால்தான் மழைக்காலத்தில் உங்கள் ஷூக்களை நன்கு உதறிவிட்டு பரிசோதனை செய்துவிட்டு அணிந்து கொள்ள சொல்கிறோம். வெளியில் ஈரம் இருப்பதால் அவை இதுபோன்ற இதமான இடங்களில் தஞ்சம் புகும்.அதனால்தான் உங்களை பாதுகாப்பாக முன்னெச்சரிக்கையுடன் இருக்கச் சொல்கிறோம். அது உங்கள் உயிரைப் பாதுகாக்கும்’ என்கிறார்.