மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள போலோ மைதானத்தில் ரோஸ்கர் மேளா நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார்.  பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பலரும்  பங்கேற்றனர்.


ரோஸ்கர் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது, 10 லட்சம் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கமான திட்டம்.  75,000 பேர் இந்த திட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ஷில்லாங்கில் நிருபர்களுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பழமையான சட்டங்கள் முட்டுக்கட்டையாக உள்ளன. மக்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சட்டங்கள் இந்த காலத்துக்கு பொருத்தமாகவும் இல்லை, மக்களுக்கு பயன்படாத சட்டங்கள், சட்ட புத்தக்கத்தில் இருக்கவும் தகுதி இல்லை" என தெரிவித்தார்.


மேலும் அவர் கூறியதாவது, "சட்டத்துக்கு கீழ்ப்படியும் சுமையை பொதுமக்களுக்கு பிரதமர் மோடி குறைக்க விரும்புகிறார். அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷமாகவும், எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாமல் வாழ வேண்டும் என்பதே பிரதமரின் எண்ணமாக உள்ளது. அந்த வகையில், புழக்கத்தில் இல்லாத பழமையான சட்டங்கள் அனைத்தையும் சட்ட புத்தகத்தில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏனென்றால், தேவையற்ற சட்டங்கள், சமானியருக்கு சுமையாக உள்ளன. வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 1,500க்கும் பழமையான சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். அதற்கான மசோத்தாக்களை தாக்கல் செய்ய உள்ளோம்" ரிஜிஜு தெரிவித்தார்.


மேலும், வடகிழக்கு பிராந்தியம் மீது மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. வடகிழக்கை செழிப்பாகவும், நாட்டை வலிமையாகவும் மாற்றுவதே பாஜகவின் விருப்பம். வடகிழக்கின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். வடகிழக்கு மாநிலத்தில் உள்ள பிரச்னைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை தீர்பதை பாஜகவின் நோக்கம். அவர்கள் அமைதியுடனும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்வ வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கம் என தெரிவித்தார்.