கர்நாடகா மாநிலத்தில் ரூ.98.52 கோடி மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் பீர்கள் கலால் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருக்கும் 40 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகள் மேற்கொண்டு வருகிறது.


தேர்தல் நேரம் என்பதால் பணப்பட்டுவாடா, மது வழங்குவது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கென சிறப்பு பறக்கும் படையினர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கர்நாடகா மாநிலம், மைசூரு மாவட்டம் காமராஜ நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கலால் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 98.52 கோடி ரூபாய் மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் பீர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


இத்துடன் கர்நாட்கா மாநிலம் முழுவதும், 6.50 கோடி மதிப்பிலான ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி மற்றும் மே 7 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல் தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு வாரங்களில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் சோதனை சாவடிகள் அமைத்து பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வரை மாநிலம் முழுவதும் ரூ.168.45 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 74.08 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம், ரூ.3.9 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.78 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.74. 41 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த பொருட்கள், ரூ.15 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.