குடியேற்றப்பிரிவு சோதனை:


சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்புவதை தடுக்கும் முயற்சியாக, தமிழ்நாட்டிற்கான குடியேற்றப்பிரிவு பாதுகாவலர், சென்னை பெருநகர காவல்துறையுடன் இணைந்து நேற்று செப்டம்பர் 25 அன்று விரிவான நடவடிக்கையை மேற்கொண்டார். இதுவரை இல்லாதவகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு முயற்சியில் 80-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் 15 குழுக்களாக பிரிந்து, சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.


இந்த கூட்டு முயற்சியின் விளைவாக, சட்ட விரோத முகவர்கள் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களை  தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்ட செல்போன்களும், லேப்-டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விதிமீறல்கள் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த சோதனையின் போது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் வேலை தேடும் நபர்களை குறிவைத்து இந்த சட்ட விரோத முகவர்கள் செயல்படுவது தெரிய வந்துள்ளது. இந்த முகவர்கள், மிக அதிக அளவுக்கு பணம் பெற்று சில சமயங்களில் விசா மற்றும் பணி நியமன பர்மிட்டுகள் வாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.


கடும் சட்ட நடவடிக்கை:


வெளியுறவு அமைச்சகத்தின் சட்டப்பூர்வ உரிமம் பெறாமல், எந்த ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ இந்தியர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப முடியாது என சென்னையில் உள்ள குடியேற்றப்பிரிவு பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.  இதற்கு மாறாக விதிமுறைகளை மீறி செயல்படுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதற்கான உரிமம் பெற விரும்பும் முகவர்கள் சென்னையில் உள்ள குடியேற்றப் பிரிவு பாதுகாவலரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு குடியேற்றப்பிரிவு பாதுகாவலரை 90421 49222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.