இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் வாகனங்களை விற்பதன் மூலம், வாடிக்கையாளர்களிடையே ஹீரோ மோட்டோகர்ப் நிறுவனம் நன்கு அறிமுகமாகியுள்ளது. பைக்குகளுக்கான இந்திய சந்தையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், ஸ்கூட்டர் விற்பனையிலும் களமிறங்கி தனக்கான சந்தையை விரிவுபடுத்தி வருகிறது. அண்மையில் தனது இரண்டு ஸ்கூட்டர் மாடல்களின் விலையையும் அந்நிறுவனம் உயர்த்தி இருந்தது.


விலை விவரம்:


இந்நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200T 4V மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.  மெக்கானிக்கல் மற்றும் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள, புதிய மாடல் மோட்டர்சைக்கிளின் விலை முந்தைய வெர்ஷனை விட சிறிதளவு உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலின் விலை, இந்திய சந்தையில்  ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்து 726, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய 2V மாடலின் விலையை விட ரூ. 1036 அதிகம் ஆகும்.


 இன்ஜின் விவரங்கள்:


புதிய எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடல் மோட்டார்சைக்கிளில் குறிப்பிடத்தக்க மாற்றமாக சற்றே சக்திவாய்ந்த 200சிசி, சிங்கில் சிலிண்டர் ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 2 வால்வுகளுக்கு பதில் 4 வால்வுகள் கொண்ட செட்டப் இடம்பெற்று உள்ளது. இந்த என்ஜின் 18.83 குதிரைகளின் சக்தி மற்றும் 17.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை ஆகிய திறனை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் புதிய மாடல் மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டு உள்ளது.






சிறப்பம்சங்கள்:


சிறப்பம்சங்களை பொருத்தவரை எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் எல்.ஈ.டி முகப்பு விளக்கு, எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்,  யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, கால் அலெர்ட்கள், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ஸ்டாண்டு சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், இரு வீல்களிலும் ஒற்றை டிஸ்க் மற்றும் அலாய் வீல் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடல்- ஸ்போர்ட்ஸ் ரெட், மேட் ஃபன்க் லைம் எல்லோ மற்றும் மேட் ஷீல்டு கோல்டு என மூன்று விதமான நிறங்களில் சந்தையில் கிடைக்கிறது.


வடிவமைப்பு:


டிசைன் அடிப்படையில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடல் மோட்டார்சைக்கிள் ஸ்போர்ட் தோற்றம் பெற்று உள்ளது. இதன் வெளிப்புற தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் முன்புற ஃபோர்க்குகள், எல்.ஈ.டி. முகப்பு விளக்கின் மேல் சிறிய ஃபிளைஸ்கிரீன், பாடி நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட ஹெட் கேசிங் வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புற டெயில் ரேக் மீது டியுபுலர் கிராப் ரெயில் உள்ளது. இதன் அலாய் டிசைன், ஸ்கூப்டு இருக்கை உள்ளிட்டவைகளில் எந்தவொரு புதிய மாற்றமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI