ஸ்மிருதி இரானி மீது விமர்சனம்:


2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை, அரசியல் கட்சிகள் தற்போதே நாடு முழுவதும் தொடங்கியுள்ளன.  இந்நிலையில்,  உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பிராந்திய காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்,  அமேதி தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.  அப்போது பேசிய அவர், அமேதி தொகுதி காந்தியின் குடும்பத்துக்கானது. இந்த தொகுதியில் இருந்து ராகுல் காந்தி எம்.பி. ஆக தேர்வான நிலையில், அவருக்கு முன்பு ராஜிவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி வெற்றி பெற்று மக்களுக்காக சேவையாற்றி உள்ளனர். தற்போது அமேதி தொகுதியில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளது. ஆனால், அமேதி தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான ஸ்மிருதி இரானி, லட்காஸ், ஜட்காஸ் (நடனத்தை இழிவுப்படுத்தும் வகையிலான சொல்) செய்யவே தொகுதிக்கு வருகிறார் என தனிமனித தாக்குதலில் ஈடுபட்டார்.


பாஜக கடும் எதிர்ப்பு:


இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜகவினர், பெண்களுக்கு எதிரான மோசமான வார்த்தைகளை காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இது தான் அந்த கட்சியின் கலாச்சாரமாக உள்ளது. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் மற்றும் கட்சியின் நீண்டகால தலைவராக ஒரு பெண்ணை கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி இப்படி கூறுவது அவமானத்துக்குரியது. ஸ்மிருதி இரானியை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.


மன்னிப்பு கேட்க மறுப்பு:


இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள அஜர் ராய், லட்கா-ஜட்கா எனும் வார்த்தை தவறான வார்த்தை இல்லை. பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தை இல்லை. அது எங்கள் பகுதியில் சகஜமாக புழக்கத்தில் இருக்கும் வழக்காடு சொல். அதனை பயன்படுத்தியதற்கான நான்  ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பதிலளித்துள்ளார்.






ஸ்மிருதி இரானி விளாசல்:


தன் மீதான விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள ஸ்மிருதி இரானி, இந்திய ராணுவம், சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள் மற்றும் பெண் தலைவர்களை அவமதித்தால் காந்தி குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் ஏன் நினைக்கிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுபோன்ற பல கருத்துக்கள் காந்தி குடும்பத்தின் முன்னிலையில் கூறப்பட்டன. காந்தி குடும்பத்துக்கு இப்படிப்பட்ட மொழி பிடிக்கும் என்றால், பின்பு ஏன் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் ஸ்மிருதி இரானி வினவியுள்ளார்.