நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்துக்கும் அதிகமான புதிய கொரோனா பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது இந்தியா. இது கொரோனா பாதிக்கப்பட்ட மற்ற சர்வதேச நாடுகள் எதுவுமே இதுவரை பதிவுசெய்யாத எண்ணிக்கை. கொரோனா பரவலை தடுக்க மூன்றாம் கட்டமாக தடுப்பூசிகள் போடும் பணி இன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தட்டுப்பாடு காரணமாகப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் மீண்டும் கிடைக்கும்வரை முகக்கவசங்கள் மட்டுமே நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம். முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் அனைவருமே தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். இந்திய கொரோனா செயற்பாட்டுக் குழுவின் தலைவர் ஆர்.எஸ். சர்மா இன்னும் ஒரேபடி மேலே போய் வீட்டிலேயும் மாஸ்க் அணியும்படி வலியுறுத்துகிறார். கொரோனாவுக்கு எதிரான தீர்வு கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தென்படாத நிலையில் சர்வதேச நாட்டு ஆய்வாளர்கள் பலர் இரட்டை மாஸ்க்கள் அணியும்படி தற்போது வலியுறுத்தி வருகிறார்கள்.


அவர்களின் ஆய்வின்படி மருத்துவ முகக்கவசங்களை காதுகளின் ஓரமாக க்ளிப் செய்து அணிந்துகொண்டு அதன்மேல் துணியாலான மாஸ்க்குகளை அணிவது காற்று உள்ளே புகுவதைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் தொற்று பரவுவது 89 சதவிகிதம் வரை தடுக்கப்படுவதாக அமெரிக்காவின் மத்திய நோய்தொற்றுக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான CDC கூறியுள்ளது.




டபுள் மாஸ்க் எப்படி அணிய வேண்டும்?


அந்த நிறுவனத்தின் பதிவுகளின்படி



  • காதோரம் க்ளிப் செய்யப்படாமல் அணிந்துகொள்ளும் மருத்துவ மாஸ்க்கள் 56 சதவிகிதம் வரை காற்று உட்புகுவதைத் தடுக்கின்றன. அதுவே துணி மாஸ்க்கள் 51 சதவிகிதம் வரை செயல்படுகின்றன.

  • காதோரம் க்ளிப் செய்யப்படாமல் மருத்துவ மாஸ்க்கள் அணிந்து அதன் மேல் துணி மாஸ்க்கள் அணிவது 77 சதவிகிதம் வரை காற்று உட்புகுவதைக் கட்டுப்படுத்துகிறது

  • அதையே காதோரம் க்ளிப் செய்தநிலையில் அணிவது 89 சதவிகிதம் வரை கட்டுப்படுத்துகிறது.



    காதோரம் க்ளிப் செய்த நிலையில் அணிவது 89 சதவிகிதம் வரை கட்டுப்படுத்துகிறது



    டபுள் மாஸ்க் அணிந்த பிறகு என்ன செய்யவேண்டும்?


  • மாஸ்க் அணிந்த பிறகு உங்களால் சரியாக மூச்சுவிடமுடிகிறதா என்பதைப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்

  • மாஸ்க் அணிந்து கொண்டு நீங்கள் தாராளமாக உரையாடலாம்.

  • மாஸ்க் அணிந்து வெளியே செல்வதற்கு முன்பு வீட்டில் சிறிது நடந்துபார்க்கவும்.

  • N95 ரக மாஸ்க்களை இரட்டை மாஸ்ககளாக அணிவதைத் தவிர்க்கவும்.

  • மாஸ்க்களை டெட்டால் போன்ற கிருமிநாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தவும்



       நாம் சரியாக இரட்டை மாஸ்க் அணிந்திருக்கிறோமா என்பதை எப்படிப் பரிசோதனை செய்வது?



  • நாம் மூச்சுவிடும்போது நமது மாஸ்க்கும் மூக்கோடு அழுத்தினால் நாம் சரியாக மாஸ்க் அணிந்திருக்கிறோம் எனப் பொருள்.

  • நமது கண் கண்ணாடியில் புகைமண்டலமாகத் தெரிந்தால் காற்று வெளியேறுகிறது எனப் பொருள்.

  • இரட்டை மாஸ்க் அணிந்த பிறகு கண்ணாடி முன் நின்று வேகமாக ஒருமுறை மூச்சை இழுத்துவிடவும். நீங்கள் கண்ணைச் சிமிட்ட நேர்ந்தால் காற்று கண்களில்படுகிறது எனப் பொருள்.