விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் எவ்வாறு மனுக்களை சரி பார்க்கிறீர்கள்? என்ன மாதிரியான கேள்விகளை மகளிரிடம் கேட்கிறீர்கள்? என கேட்டறிந்தார். தொடர்ந்து அவரே மேல் முறையீடு செய்த பெண்ணிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எதற்காக நிராகரிக்கப்பட்டது என்பது குறித்த குறுந்தகவல் வந்ததா, எதற்காக உங்கள் மனு நிராகரிக்கப்பட்டது? என்று கேட்டறிந்தார்.




தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’மேல்முறையீடு செய்யும் காலம் 24.10.2023 உடன் நிறைவடைந்தது. மேல் முறையீட்டு மனு பெறுவது நேற்று மாலையுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் இன்று வரை 11 லட்சத்து 85 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அது சிறப்பு மேல்முறையீடு அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேல் முறையீட்டு மனுக்களை 30 தினங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


ஏற்கெனவே பெறப்பட்டுள்ள மனுக்களில் கள ஆய்வுக்காக பரிந்துரைக்கப்பட்ட 7 லட்சத்து 71 ஆயிரம் மனுக்களில் 4 லட்சத்து 5000 மனுக்கள் மீது கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன எஞ்சியுள்ள 3 லட்சத்து 74 ஆயிரம் மனுக்கள் மீது கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




இவ்வாறு மேல்முறையீட்டு பெறப்பட்டுள்ள மனுக்கள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியான பயனாளிகளுக்கு விடுபாடுகள் ஏதும் இன்றி உரிமைத் தொகையானது சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்து முதலமைச்சரின் ஆலோசனை பெயரில் எத்தனை மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என அறிவிக்கப்படும் என்றார். தகுதியுள்ள ஒரு மகளிரும் விடுபட்ட விடக்கூடாது என்பதுதான் அரசின் நோக்கம் என்றும் கூறினார்.




தமிழ்நாடு ஆளுநருக்கு திமுக தலைவர்களால் அச்சுறுத்தல் உள்ளது என காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ’’என்ன நடந்தது என்பதை காவல்துறை விளக்கமாக அறிக்கை கொடுத்துள்ளனர். தவறு செய்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிச்சயம் தண்டனை பெற்றுத்தரும்’’ என்று தெரிவித்தார்.