அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பொழியும் எனவும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்கால் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நவம்பர் 1ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 30ஆம் தேதி வரை தென் மேற்கு வங்க கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு பெய்து வந்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்றைய முன் தினம் இரவு முதல் இடைவிடாது இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழையின் காரணமாக இரண்டாவது நாளாக இன்று சனிக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். திருவாரூரில் 42.4 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 31.8 மில்லி மீட்டரும், குடவாசலில் 50.4 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 56.0 மில்லி மீட்டரும், மன்னார்குடியில் 24.0 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 11 மில்லி மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது.
தொடர் கனமழையின் காரணமாக ஓடாச்சேரி கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்து உள்ளன இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர் இதேபோன்று தற்போது சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 30 முதல் 40 நாட்கள் ஆன சம்பா பயிர்களுக்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா பயிர்கள் மழை நீரில் பயிர்கள் அனைத்தும் மூழ்கி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடிகால் வாய்க்கால்களை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தூர் வாரவேண்டும், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.