தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் சண்முகநாதன் பேசுகையில், கடந்த 10 ஆண்டு காலமாக ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டனர். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பெற்றுவந்த சலுகைகள் மற்றும் உரிமைகள் அனைத்தையும் இழந்து வந்தனர். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இழந்த சலுகைகள் மற்றும் உரிமைகளை மீட்பதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை கடந்த ஆட்சியில் நடத்தினோம். ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை ஆனால் போராடிய ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் பழிவாங்கியது கடந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள் ஆசிரியர்கள் ஆனால் தற்போது ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை தற்போதைய முதல்வர் அறிவித்துள்ளார். ஆசிரியர்களை அல்லல்பட கூடிய வகையில் பல அதிகாரிகள் நடந்து வருகின்றனர்.  தமிழகத்தில் மாநில அரசின் சார்பில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அந்த வகையில் புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் நடத்தப்படும்.




ஆசிரியர் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றவர்களை இதுவரை பணி அமர்த்துவதற்கு ஆசிரியர் மன்றம் சார்பில் முதல்வரிடம் அறிவுறுத்தப்படுமா என்ற கேள்விக்கு...  மாணவர்களுடைய சேர்க்கை அரசு பள்ளிகளில் அதிகரித்திருக்கிறது. அதற்கேற்றார்போல் தற்போதைய அரசு ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கொரோனா காலத்தில் மாணவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக தொலைநோக்கு பார்வையோடு தமிழக முதல்வர் அவர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள் அதனை ஆசிரியர் மன்றம் வரவேற்கிறது. ஆனால் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது என இயக்குனர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒருசில முதன்மை கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களை பயன்படுத்துவதாகத் தெரிகிறது அதனை உடனடியாக தவிர்க்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கிய விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்க ஒரு விஷயம். ஆகையால் அந்த ஆசிரியர்கள் பாதிக்கப்படக்கூடாது மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கியது தவறான விஷயம் தான் ஆனால் அதற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு ஏற்க முடியாது.




தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது வரவேற்கத்தக்க விஷயம். தொடர் மழையின் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி கட்டிடங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பாக திருநெல்வேலியில் நடந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்க ஒன்று ஆகையால் தமிழ்நாடு முழுவதும் இதே போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்பதற்காக தற்போதைய அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது இதற்காக அனைத்து ஆசிரியர்களும் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் தொடர்ந்து மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு அளிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது இது குறித்த கேள்விக்கு... பாலியல் தொந்தரவு விவகாரத்தில் தீர விசாரிக்காமல் சில இடங்களில் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், ஆகையால் தொடக்கப்பள்ளி இணை இயக்குனர் தலைமையில் விசாரணை அமைக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி உள்ளோம் முதல் கட்ட விசாரணையில் அந்த ஆசிரியர் பாதிக்கப்படக்கூடாது ஆகையால் முதன்மை கல்வி அலுவலர் இணை இயக்குனர் முழுமையான விசாரணை செய்தபின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சண்முகநாதன் தெரிவித்தார்.