நாட்டிலேயே முதன்முறையாகக் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில்  டெல்லி சாலைகளில் 300 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நாட்டின் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்தை மின்சாரமயமாக்கும் மத்திய அரசின் ஃபேம் -II திட்டம் 2019 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.

 

இதன்கீழ் 2021-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2000 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் 2020-இல் அறிவித்திருந்தார். முதற்கட்டமாக டெல்லி சாலைகளில் வாகனங்களை பேட்டரி சார்ஜ் செய்யும் 200 பங்குகள் நிறுவப்படும் எனவும் சொல்லப்பட்டது.



 

2024-ஆம் ஆண்டுக்குள் முழுவதும் மின்சாரமயமான போக்குவரத்தைக் கொண்டு வந்து நாட்டின் முன்மாதிரியான சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மாநிலமாக டெல்லியை மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. திட்டம் செயல்படத் தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டுவந்த நிலையில் தற்போது முதற்கட்டமாக 300 பேருந்துகள் டெல்லி சாலையில் வெள்ளோட்டத்துக்காகத் தயார்நிலையில் இருக்கின்றன. 

 

அபாய எச்சரிக்கை பொத்தான்கள்(Panic buttons), GPS வசதி, சிசிடிவி வசதி என நாட்டிலேயே மிகவும் நவீனமான பேருந்தாக இவை இருக்கும். தலைநகர் டெல்லி பெண்களுக்கான பாதுகாப்பற்ற நகரமாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில் இதுபோன்ற சிசிடிவி பொருத்தும் நடவடிக்கைகள் நம்பிக்கையாக இருக்கும்.