மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14-ல் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, தூத்துக்குடியில் கடலுக்கு செல்லச்  விசைப்படகு மீனவர்கள் தயாராக உள்ளனர்.




மீன்பிடி தடைக்காலம்:


61 நாள் மீன்பிடி தடைக்காலம் வரும் 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.




மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.




படகுகள் சீரமைப்பு:


தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 266, தருவைகுளத்தில் 243, வேம்பாரில் 40, திரேஸ்புரத்தில் 2 என மொத்தம் 551 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த 61 நாட்களிலும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். பெரும்பாலான படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சில படகுகளை கரைக்குக் கொண்டு வந்து சீரமைப்பு பணிகளை உரிமையாளர்கள் மேற்கொண்டனர்.




முடிவுக்கு வரும் தடைக்காலம்:


விசைப்படகு மீனவர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து படகுகளை முழுமையாக சரி பார்த்து தயார் செய்துள்ளனர். மேலும், வலைகளையும் முழுமையாக சீரமைத்து சரி செய்துள்ளனர். பலர் புதிய வலைகளையும் வாங்கி வைத்துள்ளனர். இந்தப் பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ளன. இதையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளை கடலில் செலுத்தியும். இயந்திரத்தை இயக்கியும் பரிசோதனை செய்து வருகின்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிவடைய இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.




விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் கடந்த 2 மாதங்களாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. அதுபோல மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தடைக்காலம் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளதால் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் மீண்டும் களைகட்ட தொடங்கும். அதுபோல மீன்களின் விலையும் குறையத் தொடங்கும் என்றனர்.