ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு கடலோர மாவட்டங்களில் மீனவ பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 200 கோடி மதிப்பீட்டில் கடற்பாசி வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் மீனவ பெண்கள் கடல் பாசி வளர்ப்பு மற்றும் சேகரிப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். குறிப்பாக சம்பை, சங்குமால், ஓலைகுடா, மாங்காடு, வடகாடு, அரியாங்குண்டு, தண்ணிரூற்று உள்ளிட்ட கிராமங்களிலும் மண்டபம் வடக்குகடல் பகுதியிலும் அதிகளவில் பெண்கள் கடற்பாசி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்.
நிலத்தில் விவசாயம் போன்று பாசி வளர்ப்பும் கடலில் செய்யும் விவசாயம் கப்பா பைகஸ் என்ற வகை பாசிக்கு நல்ல சந்தை மதிப்பு உள்ளதால், தனியார் நிறுவனமே இதற்கான விதைகளை வழங்கி அதை வளர்த்து அறுவடை செய்த பாசியை கொள்முதல் செய்து மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த பாசியில் உணவு பொருள்கள், குளிர்பானம், அழகு சாதன மூலிகை பொருட்கள், மருந்து, வாசனை திரவியங்கள், ஜெல்லி மிட்டாய் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது கிலோவுக்கு 30 ரூபாய் வரை கடற்பாசிக்கு விலை கிடைத்து வருகிறது. சிறுதொழிலாக பெண்கள் இதனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.
கடலோர மாவட்டங்களில் மீனவ பெண்களில் பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் 60 சதவீத மானியத்தில் மீன்வளத்துறை மூலம் கப்பா பைகஸ் கடல் பாசி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய நான்கு கடலோர மாவட்டங்களில் 200 கோடி மதிப்பில் கப்பா பைகஸ் கடல் பாசி வளர்ப்பு திட்டம் மீனவ பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மீன்பிடி இல்லாத காலங்களிலும், மீன் வரத்து குறைவான சமயங்களிலும் கடல் பாசி வளர்ப்பின் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதால் இத்திட்டம் மீனவ பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.