கடந்த அதிமுக ஆட்சியில் கால்நடை மருத்துவ துறையில் போதிய மருத்துவர்கள் நியமிக்காததால் பல்வேறு இடங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கோமாரி நோயால் கால்நடைகள் அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகின்றது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தில் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தினை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதற்கான கறவை பசுக்கள் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் வாங்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. அதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கோமாரி நோய் அதிக அளவில் பரவியது. அப்போது ஆயிரக்கணக்கான கால்நடைகள் கோமாரி நோயால் உயிரிழந்தன. அதனை அடுத்து கால்நடை வளர்ப்போரின் கோரிக்கையினை ஏற்று அரசு ஆண்டுக்கு இரண்டு முறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுழற்சி முறையில் அனைத்து கிராமங்களிலும் நேரடியாக மருத்துவர்கள் சென்று கோமாரி தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் வலங்கைமன் தாலுகாவில் மட்டும் சுமார் 16 ஆயிரம் கால்நடைகளுக்கும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் பல்வேறு மருத்துவ பணியிடங்கள் காலி பணியிடங்கள் உள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவமனைகள் உள்ள நிலையில் சுமார் ஏழு மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அதேபோன்று வலங்கைமான் தாலுகாவில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் ஒரு மருத்துவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கச்சனம் பகுதியை அடுத்த பாமந்தூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்கிற விவசாயிக்கு சொந்தமான மூன்று பசு மாடுகள் இன்று ஒரே நேரத்தில் இறந்துள்ளது. இந்த நிலையில் மருத்துவர்கள் பசு மாடுகள் இறந்ததற்கு கோமாரி நோய் தாக்குமா என்பதை உறுதி செய்யும் வகையில் கால்நடைகளை பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கோமாரி நோய் அதிக அளவில் பரவி விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகின்றது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோமாரி தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ள வேண்டும், உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை அரசு வழங்க முன்வர வேண்டும் எனவும் கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே தமிழக அரசு மேலும் காலதாமதம் செய்யாமல் கால்நடைத் துறையில் உள்ள மருத்துவ பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.