தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. அதன்படி,
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு, பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தனர். தேர்தல் அலுவலர்களும், போலீசாரும், பத்திரிகையாளர்களும் இந்த உடை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்பி கனிமொழி பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தார். மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து அவர் ஜனநாயகக் கடமையாற்றினார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “திமுக வெற்றி பெறுவது உறுதி, மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி” என்றும் கூறினார்.
இதேபோல், தொற்றால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல், சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன் ஆகியோரும் பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தனர்.