தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வட்டுவனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜெல்மரம்பட்டி, அட்டப்பள்ளம், பவளந்தூர், உள்ளிட்ட மலை கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் வெளியிடங்களுக்கு சென்று வர வசதியாக தருமபுரியில் இருந்து டவுன் பஸ் 26 சி இயக்கப்பட்டு வருகிறது. இந்த டவுர் பஸ் தருமபுரியில் இருந்து தினமும் ஆறு முறை இந்த மலை கிராம பகுதிகளுக்கு வந்து செல்கின்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஒவ்வொரு முறையும் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் மலை கிராமங்களுக்கு வந்த டவுன் பஸ் ஜெர்மாரம்பட்டியில் பயணிகளை இறக்கி விட்டு சுமார் அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட இருந்தது.

 

இதனை தொடர்ந்து மீண்டும் பஸ்சை எடுக்க டிரைவர் முயற்சி செய்தார். அப்போது பஸ்சில் பேட்டரி பற்றாக்குறையால், ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கீழே இறங்கினர். தொடர்ந்து பஸ்ஸை தள்ளினால் ஸ்டார்ட் ஆகிவிடும் என ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இதையடுத்து பயணிகள் அனைவரும் சேர்ந்து பஸ்ஸை ஐலசா போட்டு  தள்ளினர். இதன்பிறகு பஸ் ஸ்டார்ட் ஆனது. தொடர்ந்து பயணிகள் அனைவரும் பஸ்ஸில் ஏறி பயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து மலைப் பகுதிக்கு பழைய பஸ் இயக்கப்படுவதால் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே நன்றாக பராமரிக்கப்பட்ட பஸ்களை இதுபோன்ற மலை கிராம பகுதிக்கு இயக்க வைக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர்.

 



 

காரிமங்கலத்தில் சாலையில் கேட்பாரின்றி கிடந்த மணி பர்சை எடுத்து வந்து பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைத்த மாணவன் - தவறவிட்டவரிடம் மாணவன் கையாலே வழங்கி வைத்த நெகிழ்ச்சி சம்பவம்

 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பொன்னேரி அரசு மாதிரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும்  மணிக்குமார் என்ற மாணவன், காலை பள்ளிக்கு நடந்து வந்துள்ளார். அப்பொழுது நெடுஞ்சாலையில் ஒரு மணி பர்ஸ் விழுந்து கிடந்ததை கண்டுள்ளார். தொடர்ந்து கேட்பாரற்று கிடந்த  பர்ஸை மாணவன் எடுத்து பார்த்துள்ளார். அப்பொழுது அந்த மணி பர்சில் பணம்  2000 மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அரசு ஆவணங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த மாணவன் மணி பர்ஸை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று சாலையில் கீழே கிடந்தது என கூறி ஒப்படைத்துள்ளார்.

 



 

இதனை தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியர் மதிவாணன், மணி பர்சில் இருந்த ஆவணங்களில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தவற விட்டவரை பள்ளிக்கு வர வழைத்துள்ளார். இதனையடுத்து தவற விட்டவரிடம் மணி பர்சை, மாணவனின் கையாலேயே வழங்க வைத்துள்ளார். மேலும்  கீழே கிடந்த மணி பர்சை எடுத்து வந்து தலைமையாசிரியரிடம் ஒப்படைத்த மாணவன் மணிக்குமாரின் நேர்மையை பாராட்டி தலைமையாசிரியர் பரிசு வழங்கினார். மேலும் தவறவிட்ட மணி பர்சை எடுத்து வந்த மாணவன் கையாலேயே உரியவரிடம் ஒப்படைக்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.