நடிகர் துருவ் விக்ரம் உருவாக்கியுள்ள இண்டிபெண்டெண்ட் பாடல் குறித்த அடுத்த அப்டேட் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விக்ரமின் மகனான துருவ் விக்ரம் பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். ஆனால் அப்படம் தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்தியளிக்காத நிலையில், மீண்டும் வேறொரு இயக்குநரை வைத்து ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், துருவ்வின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘மகான்’ படத்தில் தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களை கவரா விட்டாலும் துருவ்வின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் துருவ் விக்ரம் இண்டிபெண்டெண்ட் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதற்காக அவரது பெயரில் யூட்யூப் பக்கம் ஒன்றையும் அவர் தொடங்கியுள்ளார்.
இசை மீது தனக்கு பேரார்வம் இருப்பதாக தெரிவித்துள்ள துருவ் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்ரீம்ஸ்/கனவுகள் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில்எனக்கு சின்ன வயதில் நடிகர் ஆக வேண்டும், ஃபிலிம் மேக்கர் ஆக வேண்டும் ராக்ஸ்டார் ஆக வேண்டும் என பல கனவுகள் இருந்தன. ஆனால்அந்த கனவுக்குள் இறங்க எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அதனால் அது கற்பனையாகவே இருந்தது.எனது அம்மா என்னை எல்லா வகுப்புகளிலும் சேர்த்து விடுவார். ஆனால் எதிலும் எனக்கு பெரிதாக ஆர்வம் வரவில்லை. தனியாக இருக்கும் போது சினிமா சார்ந்தே யோசித்துக்கொண்டிருப்பேன். நானும் ஒரு நடிகனாக மாறி அப்பாவின் மரபை தொடர வேண்டுமென நினைக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு பயம் பிறக்கும்.
ஆனால் ஒரு கட்டத்தில் நான் நடிகன் என்பதை நானே நம்பினேன். என்னுடைய வாழ்கையில் ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோரது பாடல்கள் தான் எனது நினைவுகளாக இருக்கின்றன. அப்படிப்பட்ட நினைவுகளை எனது பாடல்கள் வழியாக உங்களை இந்த யூடியூப் சேனலில் சந்திக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், Track 1 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ரிலீசாக உள்ளது என தெரிவித்து பாடல் உருவாகும் விதம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.