பாலக்கோடு அருகே  இளைஞரின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி, காவல் நிலையம் முன்பு ஓசூர் பிரதான சாலையில் அமர்ந்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்-சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.




  தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள  வீரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். முனிராஜ் மகன் பிரபு (25) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று விடியற்காலை அதேப் பகுதியில் உள்ள கண்ணப்பன் என்பவரின் விவசாயி நிலத்தில் உள்ள மின் வேலியில் சிக்கி பிரபு இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.


இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மகேந்திரமங்கலம் காவல் துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இளைஞரின் இறப்பில் மர்மம் 



   மேலும் இச்சம்பவம் தொடர்பாக இளைஞரின் உறவினர்கள் மகேந்திரமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்து, பிரபுவின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என முறையிட்டனர்.


ஆனால் காவல் துறையினர் அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த, பிரபுவின் உறவினர்கள், மகேந்திரமங்கலம் காவல் நிலையம் முன்பு, ஓசூர்-தருமபுரி நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்டோர் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஓசூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பிறப்பின் உறவினர்களிடத்தில் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.


நீதி வேண்டும் உறவினர்கள் போராட்டம்


அப்பொழுது பிரபுவின் உறவினர்கள் பிரபு இறப்பில் சந்தேகம் இருக்கிறது. அதனை உரிய முறையில் விசாரணை நடத்தி நீதியை பெற்று தர வேண்டும். மேலும் பிரபுவை திட்டமிட்டு இரவு 11 மணிக்கு செல்போனில் அழைத்து கொலை செய்து கரும்பு தோட்டத்தில் போட்டு மின்வேலியில் சிக்கி இறந்ததாக நாடகமாடுவதாகவும்,  செல்போனில் அழைத்த நபர்கள் யார் என முழுமையான விசாரனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்பொழுது காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


உறவினர்கள் காவல்துறையிடம் வாக்குவாதம்


அப்பொழுது சாலை மறியலில் ஈடுபட்ட பிரபுவின் உறவினர்களை, காவல் ஆய்வாளர் ஒருமையில் பேசியதாக கூறி, பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் ஓசூர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.


ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்து


இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் சமரசம் பேசிய காவல்துறையினர் இது தொடர்பாக காவல் துறையினர் 5 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஓசூர் தர்மபுரி பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.