தமிழக காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் ராசி மணலில் அணை கட்டுவதால், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் பயன்பெறுவது குறித்து தென்னிந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, கர்நாடக மாநில விவசாய சங்க தலைவர் சாந்தகுமார் தலைமையில்15 பேர் கொண்ட குழு 27ஆம் தேதி தஞ்சாவூரில் கலந்துரையாடல் நடத்தி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இன்று காலை ஒகேனக்கலில் இருந்து புறப்பட்டு, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான வெளி கொண்டுள்ளது தண்ணீர் அளவீடு செய்கின்ற இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து ராசி மணல் அணைக் கட்டும் இடத்திற்கு சென்று, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அணை கட்டுவதற்காக அளவீடு செய்த இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து ராசிமணல் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த,
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
பருவநிலை மாற்றத்தால் கர்நாடகா, தமிழ்நாடு விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை உட்பட 12 மாநாகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் வாழும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி நீர் விளங்குகிறது. சுமார் 22 லட்சம் ஏக்கர் நிலத்தில் காவிரி நீரை நம்பி விவசாயம் செய்யக் கூடிய நிலையில் அந்த விவசாயிகளின் வாழ்வாதாரமாக காவிரி நீர் உள்ளது.
பருவநிலை மாற்றத்தால் உரிய காலத்தில் பெய்யக் கூடிய பருவமழை பெய்வதில்லை. ஆண்டுதோறும் வழக்கமாக பெய்யக் கூடிய பருவமழை பெய்ய மறுப்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. ஓரிரு ஆண்டுகளில் தான் உபரி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா விடுவிக்கும் நிலை உள்ளது. தமிழகம் சமதள விளைநில பகுதி ஆகும். மேட்டூர் அணையில் 93 டிஎம்சி தண்ணீர் நிரம்பியதும் மீதமுள்ள உபரி நீர் கடலுக்கு செல்வதை தடுக்க ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில் தமிழக எல்லையில் தான் அணை கட்ட வாய்ப்புள்ளது. இவ்வாறு 63 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் இந்த அணை திட்டத்தை காமராஜர் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் வந்த ஆட்சியாளர்கள் இத்திட்டத்தை கிடப்பில் போட்டதால் இருமாநிலமும் தொடர்ந்து நீராதாரப் பிரச்சினைகளால் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியல் தலையீடுகளை தவிர்த்து, காவிரி பிரச்சினை அரசியல் ஆக்கப்படுவதில் இருந்து இருமாநில விவசாயிகளும் மீட்டெடுக்க வேண்டும். மேகேதாட்டுவில் புதிய அணை கட்டினால் ஏற்படக் கூடிய பேரழிவு குறித்தும், ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில் அணை கட்டினால் இருமாநிலத்துக்கும் ஏற்படக் கூடிய பாதுகாப்பு மற்றும் பயன் குறித்த ஆய்வுகளை கர்நாடகா மாநில மூத்த விவசாயிகள் சங்க தலைவர் சாந்தகுமார் தலைமையில் 15 பேர் அடங்கிய குழுவும், பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு ஆகியோர் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த 15 பேர் அடங்கிய குழு இணைந்து 3 நாட்களாக தஞ்சாவூர் முதல் பல பகுதிகளில் மேற்கொண்டோம். இறுதியாக ராசிமணல் பகுதியை பார்வையிட்டுள்ளோம்.
ராசிமணலில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் மேகேதாட்டு பகுதி உள்ளது. அங்கு கர்நாடகா அணை கட்டினால் மொத்த உபரிநீரும் தமிழகத்துக்கு வராது, தமிழகம் அழிந்துபோகும். ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில் அதிக அளவில் மரங்கள் இல்லை. விலங்கினங்கள் வசிக்கும் பகுதியும் இல்லை. இங்கு அணை கட்டினால் அணையின் வலதுகரையில் இருந்து கர்நாடகா மாநில பகுதி குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுத்துக் கொள்ள முடியும். இருமாநிலங்களும் இணைந்து மின் உற்பத்தி செய்து பங்கிட்டுக் கொள்ள முடியும். இதை, கர்நாடகா மாநில விவசாயிகள் குழுவினரிடம் இதை எடுத்துரைத்துள்ளோம். மேகேதாட்டு பகுதியில் அணை கட்ட ஏற்கெனவே பல்வேறு முட்டுக்கட்டைகள் எழுந்துள்ளன. இதையெல்லாம் அம்மாநில விவசாயிகள் குழுவினர் உணர்ந்துள்ளனர். அடுத்த கட்டமாக கர்நாடகா மாநிலம் மாண்டியா அல்லது மைசூரில் இரு மாநில விவசாயிகளும் ராசிமணல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளோம். அந்தக் கூட்டத்தில், இரு மாநிலங்களுக்கும் தொடர்பு இல்லாத நீரியியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை நிபுணர்கள் குழுவை அமைத்து ராசிமணல் பகுதியை ஆய்வு செய்து அறிக்கை பெற உள்ளோம். பின்னர், தொடர் நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள அந்த அறிக்கையை அளிக்க உள்ளோம்.
மேலும் மாதம் தோறும் வழங்கும்படி உச்சநீதி மன்றம் கூறிய அளவுபடி தண்ணீரை கர்நாடகா மாநில அரசு வழங்குவதில்லை. மேகேதாட்டு கர்நாடகா மாநில பகுதி. ராசிமணலில் கட்டும் அணை இரு மாநில நிலப்பரப்பிலும் அமையும் பொதுவான இடம். இந்த இடத்திலிருந்து பெங்களூர் நகரத்திற்கு தேவையான குடிநீரும் 10 டி எம் சி வரை வழங்கலாம். தண்ணீரை சேமித்து வைத்து மேட்டூர் அணைக்கும் டெல்டா மாவட்டங்களுக்கு தொடர்ந்து விட முடியும் அதே போல் இங்கு மின்சாரம் உற்பத்தி செய்தால் இரண்டு மாநிலங்களும் அதை சமமாக பங்கீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தை அனைத்து விவசாய சங்கங்களும் இத்திட்டம் நிறைவேற இணைந்து பாடுபடுவோம். எனவே, மத்திய அரசும், இரு மாநில அரசுகளும் விவசாயிகளை காக்க முன்வர வேண்டும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
அதேபோல் ராசி மணல் பகுதியில் உள்ள இரண்டு மலைகளில் ஒரு பகுதி தமிழகத்திலும், மற்றொரு பகுதி கர்நாடகவிலும் இருந்து வருகிறது. இந்த இடத்தில் அணை கட்டினால் இரண்டு மாநிலங்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும். இதனை தற்பொழுது நேரில் பார்த்த பிறகு நாங்கள் புரிந்து கொண்டோம். இந்த சுற்று பயணம் தொடர்பாக மாண்டியாவில் விவசாயிகள் கூட்டம் நடத்தி அதன் மூலம் கர்நாடகா அரசுக்கு இந்த திட்டத்தை விரிவாக எடுத்துக் கூறுவோம் என கர்நாடக மாநில விவசாய சங்க தலைவர் சாந்தகுமார் தெரிவித்தார்