பள்ளி, கல்லூரிகள் பொது இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. போதை பொருட்களால் ஏற்படும் உடல் மன அழுத்தம் சமூக பாதுகாப்புகள் குறித்த தன்னார்வ அமைப்புகளும், மருத்துவர்களும் எடுத்து உறைத்து வருகின்றனர்.


இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட கஞ்சா புகையிலை பொருட்களை சமூக விரோதிகள் ரயில் மற்றும் பொது போக்குவரத்து மூலமாக தமிழகத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.


இதனை தடுக்கும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை ரயில்வே போலீசார் காவல்துறை என அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து தீவிர தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தொடர்ச்சியாக மேற்கொள்கின்றனர்.


இருப்பினும் சட்டத்திற்கு புறம்பான முறையில் போதை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்வதால் இதனை இளைய தலைமுறையினர் அதிக அளவில் உபயோகித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குறிப்பாக இணையவழியில் ஆர்டர் செய்யும்போது மற்றும் கொரியர் நிறுவனங்கள் மூலமாகவும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 16 கோடி பேர் மதுபானத்தையும் 3.1 கோடி பேர் கஞ்சாவையும் 2.3 கோடி பேர் ஒப்பியாடு பயன்படுத்தி வருவதாக போதைப்பொருள் பயன்பாடு குறித்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. 


2021 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் சுமார் 1.32 கோடி பேர் ஊசிகளின் மூலம் போதை பொருட்களை உடலில் செலுத்திக் கொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. போதைப் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது சம்பந்தப்பட்ட நபர் மட்டும் இன்றி மற்றவர்களையும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமைகிறது.


ஒரு நபர் குடிபோதையில் வாகனத்தை இயக்கி மற்றவர் மீது மோதும் போது பொருட்சேதம் மட்டும் இன்றி சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்களையும் அது அரங்கேறி வருகிறது.


போதைப் பொருள்கள் பழக்கமானது மன உடல் மற்றும் சமூக அளவிலும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. ஒரு கட்டத்தில் இந்த போதை பொருளுக்கு அடிமையாகும் போது எப்படியாவது போதை பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். அந்த சூழலில் போதை பொருட்களை பயன்படுத்தாத மற்றும் போதை பொருள்களுக்கு சற்றும் தொடர்பே இல்லாத நபர்களும் பாதிக்கப்படுகின்றனர்.


குறிப்பாக பைக் திருட்டு, பெண்களிடம் செயின் பறிப்பது, கொள்ளையடிப்பது உள்ளிட்ட சமூக விரோத குற்றங்களிலும் ஈடுபடுகின்றனர்.  இன்றைய இளம்  தலைமுறை பள்ளி, கல்லூரி மாணவர்கள்  போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். 


இதை ஆரம்பத்திலேயே பெற்றோர்கள் கண்டறிந்து கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்களின் கவனக்குறைவும் இதில் முக்கிய காரணமாக உள்ளது.  இதனால் போதை பொருட்களுக்கு அடிமையாகும் சூழலும் உள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டினால் விலை மதிப்பில்லாத மனித வளமும் போதை பொருட்களினால் வீணாகும் நிலை உள்ளது.


இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்:-


ஒரு சில வலி நிவாரண மருந்துகளை போதைப் பொருளாக பயன்படுத்தும் போக்கு சமீபத்தில் அதிகரித்துள்ளது. சமீப காலமாக வலி நிவாரண மாத்திரைகளில் மருந்து கடைகளில் மிக எளிதாக கிடைக்கிறது. சில இடங்களில் இதை தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. மருத்துவரின் பரிந்துரை சீட்டுகள் இன்றும் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஒப்பியாடு மருந்தை தவறான முறையில் பயன்படுத்துகின்றனர்.


இதை பயன்படுத்த முக்கிய காரணம்  மது அருந்தும்போது கிடைக்கும் போதையை விட கூடுதலான போதை கிடைக்கும் என்பதால் சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்துகின்றனர். இதை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது கல்லீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. போதை பொருட்களை மாத்திரை வடிவில் எடுக்கும் போது குடல், இரைப்பை உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படும். ஊசி மூலம் போதை பொருட்களை உடலில் செலுத்தும் போது நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.


மேலும் தொற்றுநோய் ஏற்படுதல் செப்டிக் ஆகுதல், நரம்புகளில் ரத்தம் கூடுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். ஒரு சில சிரஞ்சை பலர் பயன்படுத்தும் போது வைரஸ், மஞ்சள் காமாலை,  எச்ஐவி பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே அரசின் விதிமுறைகளின் படி மருந்து கடைகள் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் பரிசோதனை மருந்துகளை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.