கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக முனைவர் சௌமியா அன்புமணி போட்டியிட்டார்.


தொடர்ந்து தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் 4,12,000 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பெற்றார். மேலும் சௌமியா அன்புமணிக்கும், தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆ.மணிக்கும் இடையிலான வெற்றி வித்தியாசம் 24 ஆயிரம் வாக்குகள் தான். ஆனால் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தனக்காக 4 லட்சத்து 12 ஆயிரம் வாக்குகளை அள்ளி வழங்கிய தருமபுரி மாவட்ட மக்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளதாகவும், தேர்தலில் வாக்கு சேகரிக்க உழைத்த கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, சௌமியா அன்புமணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கிராமம் கிராமமாக சென்று நன்றி தெரிவித்தார்.


இதில் முதல் நாளில் தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைய தருமபுரி, முத்துகவுண்டன் கொட்டாய், ,சவுளூர், கொளத்தூர், குண்டலபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


அப்போது அவர் தருமபுரி தொகுதியில் என்னை நம்பி வாக்களித்து தாயுள்ளத்தோடு என்னை அரவணைத்த பொதுமக்களுக்கு நான்  சேவை புரிவேன். நான் ஏற்கனவே தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி தருமபுரி மாவட்டத்தில் குடிநீர்,  விவசாயம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து போராடுவேன். நான் தோல்வியுற்றாலும் எனக்காக வாக்களித்த லட்சக்கணக்கான வாக்காள பொதுமக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தருமபுரி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடுவேன் என தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி,



கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்த 40க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து உள்ளனர். கள்ள சாராயம் உயிரிழப்பு சம்பவத்திற்கு கடும் கன்னடத்தை தெரிவித்தார். மேலும் தமிழக அரசு முன்கூட்டியே தெரிவித்திருந்தால்,அதிக உயிர் இழப்புகள் நடந்திருக்காது.


ஆனால் அரசு அதை மூடி மறைத்ததால் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயமாக இருந்தால் என்ன? நல்ல சாராயமாக இருந்தால் என்ன? முழுவதுமாக கட்டுப்படுத்தி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் இளம் பெண்கள் கைக் குழந்தைகளுடன் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவன்களை இழந்து விதவைகளாக உள்ளனர். அதனால் பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என சௌமியா தெரிவித்தார்.