கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரிய தள்ளப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்கள் பெண்கள் என 413 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 




படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது பேருந்து விழுந்த காங்கிரீட் மேற்கூரை


11ஆம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் நேற்று முன்தினம் காலை பள்ளி துவங்கும் முன்பு வகுப்பறைக்கு வந்து படித்துக் கொண்டிருந்தனர். 


அப்போது எதிர்பாராத விதமாக வகுப்பறையின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதில் மூன்று மாணவர்களும் காயமடைந்தனர். 


தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் காளியப்பன் காயமடைந்த மூன்று மாணவர்களையும் மீட்டு சிங்காரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு மூவரும் வீடு திரும்பினர். தகவல் அறிந்த ஒன்றிய குழு சேர்மன் உஷாராணி, குமரேசன், ஆணையாளர் பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் சரவணன் சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் முருகன் எஸ் ஏ கணேஷ் பாபு, பெரிய தள்ளப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி, திமுக ஒன்றிய செயலாளர் மூன்றாம் பட்டி குமரேசன் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.


இந்த கட்டிடம் 2021-22 ஆம் ஆண்டில் முன்னாள் எம்பி செல்வகுமாரின் தொகுதியில் மேம்பாட்டு நிதியிலிருந்து 21.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த கல்வியாண்டு ஜூன் மாதம் முதல் இந்த கட்டிடம் மாணவர்கள் பயன்பாட்டிற்கு வந்தது. கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  


இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- 


2021-22 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடம் இவ்வளவு குறுகிய காலத்தில் காங்கிரீட் பெயர்ந்து விழுந்த நிலையில் கட்டடம் எவ்வளவு தரமற்றதாக கட்டியிருக்க வேண்டும். அதேபோல் ஒரே நாளில் இந்த கான்கிரீட் பெயர்ந்து விடுவதற்கான வாய்ப்புகள் இல்லை அரசு கட்டிடங்களை கட்டுகின்ற ஒப்பந்ததாரர்கள் தரமான முறையில் கட்டுவதில்லை கான்கிரீட் பூச்சிய பிறகு போதிய தண்ணீர் ஊற்றுவதில்லை. இதனால் குறைந்த காலத்திலேயே சுவர்கள் அங்கங்க வெடிப்பு ஏற்பட்டு சுவர்கள் பெயர்ந்து விழுகின்ற நிலை ஏற்படுகிறது.


ஏற்கனவே இந்த வகுப்பறை கட்டிடம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடமாக இருந்தாலும் தரம் இல்லாததால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்ட நிலையில் இருந்துள்ளது. ஆனால் இதை ஆசிரியர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.


கான்கிரீட் விரிசல்கள் வகுப்பறைகள் சரியான நிலையில் உள்ளதா சுவர்களில் ஏதேனும் வெடிப்புகள் உள்ளதா என ஆசிரியர்கள் மிகவும் கவனமாக பார்த்திருக்க வேண்டும். ஆனால் ஒரே நாளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் கிடையாது.


எனவே பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் சுவர்களும் காங்கிரீட் மேல் தரைகளும் சரியாக உள்ளனவா என்று பார்க்க வேண்டும் அப்படி இருக்கும் பட்சத்தில் மாணவர்களை அந்த வகுப்பறைக்குள் அனுமதிக்க கூடாது.


சுவரில் விரிசல் ஏற்பட்டதை கண்ட உடனேயே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதனை சரி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.