தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட இந்த அணையில் ஆண்டுதோறும் தண்ணீர் சேமிக்கப்பட்டு இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மீன்வளத்துறை சார்பில் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு குத்தகை முறையில் மீன் பிடித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியை சேர்ந்த மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் மீன்பிடி குத்தகை எடுக்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக மீன் பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் கோடை மழை இல்லாத காரணத்தினால் அணையின் நீர்மட்டம் 38 அடிக்கு கீழே சென்றது. இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையின் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக கேஆர்பி அணைக்கு வினாடிக்கு 400 கன அடி விதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தற்போது வந்துள்ள தண்ணீரில் அதிகளவில் ரசாயனம் கலந்து வந்ததால் கேஆர்பி அணையில் வளர்க்கப்பட்ட மீன்கள் கொத்துக்கொத்தாக சேர்ந்து தண்ணீரில் மிதப்பதாக மீனவர்கள், பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மீன்கள் அதிக அளவில் செத்து மிதப்பதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
தென்பெண்ணை ஆற்றில் அதிகளவில் ரசாயனம் கலந்த நீரால் மீன்கள் உயிரிழந்து விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் கேஆர்பி அணை நீர் தேக்கத்தில் உள்ள தண்ணீரை சேகரித்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேஆர்பி அணையின் நீர்தேக்க பகுதியில் உள்ள தண்ணீரில் வழக்கத்தை விட நைட்ரைட் - நைட்ரேட் - அம்மோனியா போன்றவை அதிகரித்துள்ளது. இதனால் மொத்த காரத்தன்மை 600 மில்லி கிராம் உள்ளது. ஆனால் 40 முதல் 400 பிபிஎம் வரை மட்டுமே இருக்க வேண்டும். இதன் காரணமாக தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துள்ளது. இதனால் மீன்களின் உகந்த வளர்ச்சி அதிகரித்து மேலும் நீரில் மீன் உயிர் வாழ்வதற்கான மிகவும் ஆபத்தான பாதிப்புகளை காணப்படுகிறது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீரில் மீன்கள் வாழ்வதற்கான தன்மை இல்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையில் மேற்கண்ட நைட்ரைட் - நைட்ரேட் - அம்மோனியா அதிகரிக்க என்ன காரணம்? எதனால் ஆக்சிஜன் குறைந்தது என்பவை குறிப்பிடவில்லை?. ரசாயனம் கலந்த நீரால் இவை ஏற்பட்டதா? அல்லது அதிக அளவில் பாசி படர்ந்த காரணமாக நிகழ்ந்ததா? அல்லது அதிக வெப்பம் காரணமாக நிகழ்ந்ததா? என்கிற விபரம் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படாமல் உள்ளதால் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
தற்போது லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் நிலையில் நாள்தோறும் இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீராடி செல்கின்றனர். அவர்களுக்கு இதனால் எந்த விதமான உபாதைகள் ஏற்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.