தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியில், மாடுபிடி வீரர்களுக்கு கார் பரிசாக கொடுக்காமல்,  டிராக்டரை பரிசாக அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தருமபுரி மாவட்ட பாமக சார்பில் பாலக்கோடு வாக்கு சாவடி களப்பணியார்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். முன்னதாக அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், ”காவிரி உபரிநீர் திட்டத்தினை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சட்டத்தில் இடமில்லாத அணையை கட்ட கர்நாடக மாநிலத்தில் 1000 கோண்டி நிதி ஒதுக்கியுள்ளார்கள். ஆனால் தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என காரணம் சொல்கிறார்கள். இந்த உபரிநீர் திட்டத்தினை நிறைவேற்ற இங்கு சட்டம் இருக்கு, தண்ணீர் இருக்கு. ஆனால் அதை நிறைவேற்ற அரசுக்கு மனமில்லை. இந்த காவிரி உபரிநீர் திட்டத்தினை நிறைவேற்றாவிட்டால், பாமக சார்பில் மாபெரும் தொடர் மறியல் போராட்டம் நடைப்பெறும். இந்தப் பக்கம் இருந்து, அந்த பக்கம் எந்த போக்குவரத்தும் இருக்காது. இதை நான் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த திட்டத்தை மாவட்டத்தில் உள்ள மக்கள் எல்லோரும் விரும்புகிறார்கள். விவசாயத்தகற்கு தேவையான நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். சிப்காட் தொழிற்சாலை கொண்டு வர வேண்டும். திமுகவின் கணக்கில் தருமபுரி மாவட்டம் இடம்பெறவிவல்லை.



 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்து செய்யப்பட்டவுடன், இன்னும் உயிர் பலி தொடர்கிறது. இதனை தடை செய்ய தமிழக அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து, முறையீடு செய்ய வேண்டும். இதில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதே தெரியவில்லை. 

 

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக கணக்கெடுக்க வேண்டும். இதற்காக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரில் சென்று முதல்வரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அரசு வழக்கறிஞராக இருந்தவரே, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என ஒப்புதல் தெரிவித்துள்ளார். 1930 ஆண்டு கணக்கெடுப்பு படியே, இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. உண்மையிலே நிர்வாகத் திறன் இருந்தால், எந்தெந்த சாதிக்கு இடை ஒதுக்கீடு கிடைத்துள்ளது என்பதை கண்டறிந்து, வழங்க வேண்டும். சாதி கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வது, ஏமாற்று வேலை. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அரசு அறிவிக்கவில்லை என்றால், கடுமையான போராட்டம் நடத்துவோம். 

 

ஸ்டெர்லைட் ஆலை மூடியதால், 10000 பேருக்கு வேலை இழப்பு என்பதை கணக்கு பார்த்தால், இந்த ஆலை இயங்கினால், 2 இலட்சம் பேர் உயிருக்கு ஆபத்து ஏற்படும். வேலையை விட, உயிர்தான் முக்கியம். அதனால் ஸ்டெர்லைட் ஆலை திறக்க கூடாது. இதற்கு தமிழக அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிட வேண்டும். 

 

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை திட்டமிட்டு பாதுகாப்புடன் நடத்த வேண்டும். இதில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு, கார் பரிசாக வழங்குகிறார்கள். ஆனால் மாடுபிடி வீரர்கள் விவசாயிகள் தான். இவர்களால் பெட்ரோல், டீசல் போட்டு அதை பயன்படுத்த முடியாது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசாக டிராக்டரை பரிசாக அரசு வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் இதனை வைத்து வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள முடியும்.



 

முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் அதிமுக, திமுக ஆட்சி காலத்தில் இந்த மாநாடுகள் நடைபெற்றது. இதில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டபடி தொழிற்சாலைகள் வருவதில்லை. இதனால் இதுவரை நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு, முதலீடுகள் எவ்வளவு வந்தது? எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டது என்பதை தெரியப்படுத்த வேண்டும். அதேப்போல் திமுக தேர்தல் வாக்குறுதியில் தொழிற்சாலைகளில் 75 சதவீதம் வேலை வாய்ப்பு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்கள். அதை உடனடியாக திமுக அரசு செயல்படுத்த வேண்டும்.‌ 

 

காரிமங்கலத்தில் கடந்த வாரம் விவசாய நிலத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட, விவசாயி சரவணனை, மது அருந்திய 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. மதுக் கடைகளை திறந்து, இந்த அரசு இளைஞர்களை சீரழிக்கிறது. இது தான் திராவிட மாடலா? இதற்கு தமிழ்நாடு அரசு தான் பொறுப்பு‌. மேலும் உயிரிழந்த சரவணனுக்கு சிறு குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.