கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு பகுதியில் மக்களுக்கு மாநகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கம் தொட்டிக்கு ஏற்றப்பட்டு, மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் பெரும்பாலானோர் குடிக்க மற்றும் சமையல் செய்ய கேன் தண்ணீரை பயன்படுத்துகின்றனர். மேலும் சிலர் இந்த தண்ணீரை குடிப்பதற்கும், சமைப்பதற்கு என அனைத்து தேவைகளுக்கும் இந்த தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சின்ன எலசகிரி அம்பேத்கர் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
அப்பகுதியில் மாநகராட்சி தண்ணீரை பயன்படுத்தும் சில கிராம மக்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் நேற்று வரை பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 42-க்கும் மேற்பட்டோர், ஓசூர் அரசு மருத்துவமனை மற்றும் ஓசூர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற, மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய், மற்றும் குப்பைகளை அகற்றி, குடியிருப்பு பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த குடியிருப்பு பகுதிகளில் மருத்துவ முகாம்களை அமைத்து, லேசாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கேயே மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களை, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 17 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் 40 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், பாதிப்புகுள்ளான பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து, அந்த பகுதியில் வீடுவீடாக சென்று, காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
தொடர்ந்து ஓசூர் மாநகராட்சி சார்பில் விநியோக செய்யப்பட்ட தண்ணீரை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும், மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் மாநாகட்சி மூலம், பொதுமக்களுக்கு தற்காலிகமாக டேங்கர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ஓசூர் மாநகராட்சி பகுதியில் வழங்கப்பட்ட குடிநீரை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இரண்டு நாட்களாக வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சாந்தபுரம் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் கழிவு நீர் கலக்கும் காட்சிகள் வெளியாகி மக்களை அதிர வைத்தது. இந்த சூழ்நிலையில் தண்ணீர் மாதிரிகளை நேற்று சேகரித்து ஆய்வுக்காக அனுப்பினர். ஆனால் இன்னும் ஆய்வறிக்கை வரவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சோதனை முடிவில்தான், எந்த தண்ணீரால் பிரச்னை என்பது தெரியவரும்.