காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20000 கன அடியிலிருந்து, வினாடிக்கு 21,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இன்று இரவுக்குள் வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்பு. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கர்நாடக அணைகளான கபினி அணையில் வினாடிக்கு 36,000 கனஅடி, கிருஷ்ணராஜசாகர் அணையில் வினாடிக்கு 550 கன அடியாகவும், கிளை நதியான நுகு அணையில் இருந்து 4000 கன அடி என மொத்தம் 40,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, நேற்று காலை முதல் நீர்வரத்து வினாடிக்கு 18000, 20,000 கனஅடி என படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 21,000 கன அடியாக அதிகரித்ததுள்ளது.
மேலும் இந்த நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக ஒகேனக்கல் ஐந்தருவி தண்ணீரின்றி வறண்டு கிடந்த பாறைகளாக காட்சியளித்து வந்த நிலையில், தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார்.
அதேபோல் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஆற்று பக்கம் கொண்டு செல்ல வேண்டாம் எனவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.
இன்று ஆடி பண்டிகை என்பதால், வழக்கமாக காவிரி ஆற்றில் புனித நீராட ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகளும் வருபவர்கள். ஆனால் நீர்வரத்து அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளதால், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 25,500 கனடியில் இருந்து 40,500 கன அடியாக அதிகரித்து இருப்பதால், இந்த தண்ணீர் இன்று மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு, மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.