அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. இதனால் பள்ளிக் கல்வித்துறையில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக பல்வேறு புதுமையான செயல்பாடுகளை, திட்டங்களை வகுத்து, முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.




தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்கிடுவது அவசியமாகும். குறிப்பாக 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வுதவி மற்றும் ஊக்கத் தொகை அனைத்தும், மாணவ/ மாணவியர்களுக்கு குறித்த நேரத்தில் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" மேற்கொள்ளும் பணிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இப்பணியினை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மாநிலம் முழுவதும் 770 ஆதார் கருவிகளைக் கொண்டு புதிய ஆதார் பதிவு, புதுப்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தரவு உள்ளீட்டாளர்களை நியமித்துள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் 17 தரவு உள்ளீட்டாளர்கள் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.  தரவு உள்ளீட்டாளர்கள் அனைவருக்கும் முறையான பயிற்சி வழங்கப்பட்டு, தருமபுரி ஒன்றியத்தில் அவ்வையாளர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நல்லம்பள்ளி ஒன்றியத்தில் அதியமான் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பென்னாகரம் ஒன்றியத்தில் பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஏரியூர் ஒன்றியத்தில் ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பாலக்கோடு ஒன்றியத்தில் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் காரிமங்கலம் ஒன்றியத்தில் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி  ஆகிய இடங்களில் நேற்று முதல் (10.06.2024)  நடைபெற்று வருகிறது. மேலும் இந்த முகாம்கள் தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் அட்டை பதிவு ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. 


மேலும் தருமபுரி அரசு அவ்வையாளர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடப்பாண்டிற்கான மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், பாடக் குறிப்பேடுகள், புவியியல் வரைப்பட புத்தகங்களை மாவட்ட அளவில் வழங்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தொடங்கி வைத்தார்.  தருமபுரி மாவட்டத்திற்கு வரப்பெற்றுள்ள பாடப்புத்தகங்களையும், வழங்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.