சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, தருமபுரி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 44 சாலையில், தொப்பூர் கணவாய் மலைப் பகுதியில் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டும். இந்த சாலை வழியாக பெங்களூர் மற்றும் சென்னை மார்க்கத்தில் இருந்து இருபுறமும் தினமும் 50,000 மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. தென் மாவட்டங்களில் இருந்து கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹைதராபாத், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு இந்த சாலை வழியாக கார்கள், கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொப்பூர் கணவாய் மலைப் பகுதியில் கட்டமேடு பகுதியில் இருந்து இரட்டை பாலம் வரை, தாழ்வான சாலை, வளைவுகள் அதிகமாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதில் மாதத்திற்கு 100 பேராவது காயமடைந்து வருகின்றனர். அதில் சிலர் உயிரிழக்கும் என்ற சூழல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் 19 விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் தொப்பூர் மலைப் பகுதியில் விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் பெருமளவில் குறைந்து வருகிறது. ஆனாலும் ஒரு சில ஓட்டுனர்களின் அலட்சியத்தால் விபத்துக்கள் நடந்த வண்ணமாகவே இருந்து வருகிறது. கடந்த 25ஆம் தேதி மாலை 5 மணி அளவில் தொப்பூர், இரட்டை பாலம் அருகே சேலம் நோக்கி சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற, இரண்டு கார்கள், இரண்டு லாரிகளின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் அரியலூரை சார்ந்த வினோத்குமார் உள்ளிட்ட எட்டு பேர் சென்ற கார் தீ பிடித்ததில், காரில் இருந்த விமல்குமார், மஞ்சுளா, மரியா அனுஷ்கா ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடற்கருகி உயிரிழந்தனர். மேலும் இந்த வண்டியில் வந்த ஜெனிபர் சிகிச்சை பலனின்றி சேலம் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதில் அதிர்ஷ்டவசமாக மூன்று பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டும், காயமடைந்த லாரி ஓட்டுநர்கள் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் கருகியதால், எந்த ஆவணங்களையும் காவல் துறையினரால், சேகரிக்க முடியாமல், காயமடைந்தவர்கள் அனைவரும் சேலம் மருத்துவமனையில் இருந்ததாலும், காயமடைந்தவர்கள் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாலும் இதுவரை காவல் துறையினரால் விபத்தில் சிக்கியவர்கள், இறந்தவர்களின் விவரம் உள்ளிட்ட அடையாளங்களை சேகரிக்க முடியாமல் தவித்தனர். மேலும் சேலத்தில் உள்ள வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உதவியுடன் இறந்தவர்களின் பெயர் விவரத்தை சேகரிக்க முடிந்தது.
இந்நிலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக ஒரு சில தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்கள் தொப்பூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் விபத்துக்கள் நடந்த உடனே உயிரை காப்பாற்றுகின்ற நோக்கில் காவல் துறையினரும், வருவாய் துறையினரும் ஆம்புலன்ஸில் மீட்கப்பட்டவர்களை அனுப்பி வைக்கின்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விடுகின்றனர். ஆனால் தொப்பூர்-தருமபுரி இடையே 25 கிலோ மீட்டர் உள்ள நிலையில், 20 நிமிடத்தில் அரசு மருத்துவமனைக்கு சென்று விடலாம். ஆனால் இந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் வருவதில்லை. சேலம் நோக்கி சென்று விடுகிறது. இதனால் விபத்துகளில் சிக்குபவர்களின் விவரங்களையும், அடையாளங்களையும் கண்டுபிடிப்பதில் காவல் துறையினருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தொப்பூர் பகுதியில் விபத்து ஏற்படுகின்ற நேரத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, தருமபுரி அரசு மருத்தவமனைக்கு கொண்டு வரும் நோக்கில் ஆம்புலன்ஸ்களை தயார்படுத்தி வைக்க வேண்டும். காவல்துறையினரும் வருவாய்த் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அவ்வாறு விபத்தில் சிக்குபவர்களை மீட்டு, காவல் துறையினர் எளிதில் விபத்தில் சிக்குபவர்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக தருமபுரி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். இதற்கு அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினர் வலியுறுத்துகின்றனர்.